சென்னையில் தொடக்கம்: பாலியல் மாநாட்டில் டாக்டர்கள் திரண்டனர்; மரபணு காய்கறிகளால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை
இன்டியன் அசோஷியேசன் பார் செக்சாலஜி மெட்ராஸ் பல்கலைக்கழகம் சார்பில் 5-வது சர்வதேச செக்சாலஜி மாநாடு வடபழனி கிரீன்பார்க் ஓட்டலில் நடந்தது.
இம்மாநாட்டில் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, ஜெர்மனி, மலேசியா, கனடா போன்ற நாடுகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டை மெட்ராஸ் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் ஜி.திருவாசகம் தொடங்கி வைத்தார். டாக்டர் ஜி.ராஜமோகன் தலைமை தாங்கினார். இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் செக்சுவல் மெடிசின் இயக்குனர் டாக்டர் டி.காமராஜ், டாக்டர் அடைக்கண் கணேசன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
பேராசிரியர் தங்கராஜ், டாக்டர்கள் மோகனம்பாள், ராஜமோகன் வாழ்த்தி பேசினார்கள். டாக்டர் கே.எஸ். ஜெயராணி நன்றி கூறினார்.
இணையதளமும் பாலுறவும் என்ற தலைப்பில் டாக்டர் பரமேஸ்வரி, பாலுறவு செயல்பாடுகள் பற்றி டாக்டர்கள் அடைக்கண் கணேசன், மோகனம் பாள், சரஸ்வதி ஆகியோர் பேசினார்கள். பாலியல் மாநாடு பற்றி டாக்டர் காமராஜ் கூறியதாவது:-
இந்த மாநாட்டில் எச்.ஐ.வி. கிருமி கொசு மூலம் பரவாது என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பால்வினை நோய்களுக்கான நவீன சிகிச்சை முறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
சமீப காலமாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய், தக்காளி, அரிசி, வெண்டைக்காய், கேரட், முட்டைக்கோஸ், வாழைப்பழம், கறிக்கோழி போன்றவற்றை அமெரிக்காவை சேர்ந்த மான்சான்டோ போன்ற நிறுவனங்கள் உருவாக்கி உள்ளன. இந்த மரபணு காய்கறி- பழங்கள், பயிர்களை சாப்பிட்டதால் அமெரிக்காவில் பிறக்கும் 10 குழந்தைகளில் 2 பேருக்கு ஆட்டிசம் பிறவி ஊனம் போன்ற குறைபாடுகளுடன் பிறந்துள்ளன.
காய்கறி பழங்களில் பாச்சான், ஓணான், தவளை, வெட்டுக்கிளி, பன்றி, கழுதை போன்ற விலங்குகளின் மரபணு புகுத்தப்படுகிறது. மரபணுவானது மனித உடலில் மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. இவை உயிருக்கு உலை வைப்பதாகவும் உள்ளது. மரபணு பற்றி குறைந்தது 50 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த பிறகுதான் அப்பயிர்களை மனிதர்கள் சாப்பிட அனுமதிக்க வேண்டும்.
லாப நோக்கத்தில் செயல்படும் மான்சான்டோ போன்ற சர்வதேச நிறுவனங்கள் மனிதர்கள்- விலங்குகளின் உயிரைப் பற்றி சிறிதளவு கூட கவலைப்படவில்லை.
மரபணு பயிர் விதைகளில் உள்ள முளைக்கும் தன்மையை இந்நிறுவனங்கள் அகற்றி விடுகின்றன. இது அவசியம் இல்லாத ஒன்று. எதிர்காலத்தில் இது இந்திய விவசாயத்தை முற்றிலும் சீர்குலைத்து விடும் பேராபத்து உள்ளது. மரபணு காய்கறி- பழங்கள் பயிர்களை தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்-பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்று மருத்துவ ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. மரபணு பயிர்களில் உள்ள விஷத்தன்மை வைரஸ் காய்ச்சல், புற்று நோய், சிறு நீரகக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
ஆண்களிடம் மலட்டுத்தன்மை அதிகரித்தால் பெண்கள் குழந்தை பெறுவதற்கு உயிரணு வங்கிகளிடம் இருந்துதான் உயிரணு பெற வேண்டிய அவல நிலை ஏற்படும்.
எனவே இம்மாநாட்டில் மரபணு பயிர்களை நீண்ட கால ஆராய்ச்சிக்கு பிறகுதான் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு டாக்டர் காமராஜ் கூறினார்.
இன்று மாலை கிரீன்பார்க் ஓட்டலில் காதல் வங்கி தொடங்கப்படுகிறது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் இதை தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை டாக்டர்கள் காமராஜ், ஜெயராணி ஆகியோர் செய்துள்ளனர்.



del.icio.us
Digg
