தவறான வழியில் செல்வதை தடுக்க மாணவர்களுக்கு “பாலியல்” கல்வி வேண்டும்; டாக்டர்கள் மாநாட்டில் தீர்மானம்
இன்டியன் அசோசியேசன் பார் செக்சாலஜி மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகம் சார்பில் 5-வது சர்வதேச பாலியல் மாநாடு வடபழனி கிரீன்பார்க் ஓட்டலில் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாள் மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் எய்ட்ஸ் நோய் பற்றியும் அதன் நவீன சிகிச்சை முறைகள் பற்றியும் டாக்டர்கள் காமராஜ், ராஜ்மோகன், ராகவேந்திரன் விளக்கம் அளித்தனர்.
ஆண்களிடம் உள்ள உயிரணு முந்துதல் பிரச்சினைக்கான தீர்வு பற்றி டாக்டர்கள் சிதம்பரம், சுரேஷ், முத்துசாமி விளக்கப் படங்களுடன் விவரித்தனர்.
நீரிழிவு நோயால் ஏற்படும் ஆண்மை குறைபாடு பற்றி டாக்டர்கள் தனலட்சமி, தமிழ்செல்வி, ராஜ்மோகன் ஆகியோர் பேசினார்கள்.
மாநாடு பற்றி டாக்டர் ஜெயராணி கூறும்போது, பாலியல் மாநாட்டில் தற்போது உலகை மிரட்டி கொண்டிருக்கும் மரபணு காய்கறி, பழங்கள், பயிர்கள் பற்றி முறையான நீண்டகால ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றும், அதன்பிறகே அவற்றை மனிதர்கள், விலங்கு களுக்கு வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீரிழிவு நோயுள்ள ஆண்களுக்கு பாலியல் குறைபாடு ஏற்படுவது போல பெண்களுக்கும் ஏற்படுகிறது. இதுபற்றி மருத்துவர்கள் மிகத் துல்லியமாக விளக்கம் அளித்தனர்.
மாணவர்கள் பலர் பருவ வயதில் பாலுறவு பற்றி அறியாததால் தவறான வழியில் சென்று வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள். இதனால் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை உடல் அமைப்பு பற்றிய அடிப்படை கல்வியும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உடல் ரீதியான சில முக்கிய அம்சங்கள், பராமரிப்பு பற்றியும் கற்றுத்தர வேண்டும்.
இதையடுத்து 11 மற்றும் 12-ம் வகுப்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு, பாலியல் பற்றி பயிற்றுவிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மஞ்சள் பத்திரிகை படித்து கெட்டுப் போகாமல் இருப்பார்கள்.
குழந்தையின்மைக்கான அதிநவீன சிகிச்சைகள் தற்போது ஏராளம் உள்ளன. எந்த ஒரு தம்பதியும் தனக்கு இனி குழந்தையே பிறக்காதா? என்று துளி அளவு கூட கவலைப்பட தேவையில்லை. அந்த சிகிச்சை முறைகள் பற்றியும், எந்த மாதிரியான குறைபாடு உள்ளவர்களுக்கு எந்த சிகிச்சை அளிப்பது என்பது பற்றியும் நிபுணர்கள் விளக்கம் அளித்தனர் என்றார்.
மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாடுகளை சேர்ந்த மருத்துவர்கள் தங்கள் நாட்டில் உள்ள பாலியல் பிரச்சினைகள் பற்றியும், அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது பற்றியும் பேசினார்கள்.
ஈரானை சேர்ந்த பேரா சிரியர் ரிமாஸ் அந்நாட்டு மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் உள்ள தவறான பாலுறவு பற்றியும், அவர்களை எப்படி நல்வழிபடுத்தினார்கள் என்பது பற்றியும் பேசினார்.
டாக்டர் காமராஜ் கூறும் போது, 5-வது சர்வதேச மாநாடு, வெற்றிகரமாக நடந்தது. நாங்கள் தொடங்கி உள்ள காதல் வங்கி நாட்டில் விவாகரத்துகளை குறைக்க பயன்படும்.
அடுத்ததாக மனித இனத்திற்கு பேராபத்தாக உள்ள மரபணு பயிர்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் டாக்டர்கள் மாநாட்டில் முடிவு செய்துள்ளோம்.
நவீன ஆராய்ச்சி என்ற பெயரில் மனிதன் உண்ணும் உணவுப் பொருட்களில் உள்ள மரபணுவை மாற்றி வருகிறார்கள். வைரஸ்களை காய்கறி, பழங்களில் செலுத்தி அவற்றை விஷமுடையதாக மாற்றி வருகிறார்கள். இதை சாப்பிடுவோர் உடனடியாக பாதிக்கப்படாவிட்டாலும், சில மாதங்களுக்கு பிறகு உடல்ரீதியாக பெரிய பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அடுத்த தலைமுறையையும் மிகவும் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.
மலட்டுத்தன்மை ஏற்படுவதை தடுக்க மரபணு காய்கறி, பயிர் வகைகளை சாப்பிடாமல் இருப்பதே சிறந்த வழி. மத்திய- மாநில அரசுகள் மரபணு பயிர்களுக்கு தடை விதிப்பதுதான் சிறந்த வழி என்று டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு டாக்டர் காமராஜ் கூறினார்.
மாநாட்டில் பள்ளி பருவத்திலேயே மாணவர்களுக்கு பாலியல் கல்வி அளிக்கப்படுவது அவசியம் என்றும் மரபணு பயிர்களால் ஏற்படும் மலட்டுத்தன்மை பற்றி மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



del.icio.us
Digg
