தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைத்துள்ளோம்: பி.டி.கத்தரிக்காய்க்கு தடை விதிக்கவில்லை; மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் சென்னையில் பேட்டி
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு அனுமதி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து மத்திய அரசாங்கம் பி.டி.கத்தரிக்காய்க்கு அனுமதி இல்லை என்று அண்மையில் அறிவித்தது. இருந்த போதிலும் பி.டி.கத்தரிக்காய்க்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாய அமைப்புகள் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், பி.டி. கத்தரிக்காய்க்கு தடை விதிக்கவில்லை என்றும் தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைத்திருக்கிறோம் என்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறினார். உயிரி தொழில்நுட்பம், உணவு பாதுகாப்பு, பருவ நிலை மாற்றம் தொடர்பான 3 நாள் சர்வதேச கருத்தரங்க நிறைவு விழா சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சாமிநாதன் அறக்கட்டளையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு பி.டி. கத்தரிக்காய்க்கு முழுமையான தடை ஏதும் விதிக்கவில்லை. தற்காலிகமாகத்தான் அதை நிறுத்தி வைத்துள்ளோம். அனைத்து மாநில முதல்-அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் விஞ்ஞானிகள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் ஒத்தக்கருத்து ஏற்பட்ட பின்னரே இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். இது தொடர்பாக விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால், பி.டி. கத்தரிக்காய்க்கு தடை விதிப்பதாக நான் எங்கேயும் அறிவிக்கவில்லை. பி.டி. கத்தரிக்காய்க்கு மட்டுமல்ல மரபணு மாற்றம் செய்யப்பட்ட இதர உணவு பொருட்கள் தொடர்பாகவும் ஒத்தக்கருத்து பெறப்படும்.
இந்த விஷயத்தில் வெளிப்படையாக முடிவு எடுப்போம். விஞ்ஞானிகளின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்குவோம். ஒருசில விஞ்ஞானிகள் பி.டி. கத்தரிக்காய்க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ஆனால், யாரும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
இவ்வாறு மத்திய மந்திரி ஜெய்ராம் கூறினார்.



del.icio.us
Digg
