உத்தரபிரதேச பயணம்: ராகுல்காந்தி மீது போலீசார் அதிருப்தி; பாதுகாப்பு இல்லாமல் சென்று விடுவதாக புகார்
உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் ஒரு ஆசிரமத்தில் ஏற்பட்ட நெரிசலில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி கடந்த வெள்ளிக்கிழமை உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் என்ற ஊருக்கு சென்றார்.
ராகுல்காந்தியின் வருகை உள்ளூர் போலீசாருக்கு தெரிந்திருக்கவில்லை. தகவல் அறிந்து அவர்கள் செல்வதற்குள் ராகுல்காந்தி வேறு கிராமத்துக்கு சென்றுவிட்டார்.
அதிர்ச்சி அடைந்த போலீசார் ராகுலை தேடி அலைந்த நிலையில் அவரோ மற்ற கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். ராகுல்காந்தியின் இந்த திட்டமிடாத பயணத்தால் போலீசார் சிரமத்துக்குள்ளானார்கள்.
அன்று மாலை போலீஸ் படை ஒன்று அவரை சுற்றி பாதுகாப்புக்கு நின்றது. ஆனால் அவர்களை தவிர்த்துவிட்டு இரவில் சில கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்துப் பேசினார். இதனால் போலீசார் தவித்தனர்.
உரிய பாதுகாப்பு இல்லாமலும்,முறைப்படி தகவல் தெரிவிக்காமலும் ராகுல்காந்தி நடந்து கொள்கிறார் என்று போலீசார் அதிருப்தி அடைந்தனர். இது தொடர் பாக அறிக்கை ஒன்றை தயாரித்து உத்தரபிரதேச முதல்- மந்திரி மாயாவதிக்கு அனுப்பி உள்ளனர்.
கடந்த 6 மாதங்களில் ராகுல் காந்தி இப்படி போலீசாருக்கு தன் சுற்றுப்பயணத்தை முன்கூட்டியே தெரிவிக்காமல் வந்து சென்றது இது 3-வது முறையாகும்.



del.icio.us
Digg
