பிரதமர் சமரசம்: முலாயம்சிங்- லல்லு ஏற்க மறுப்பு; அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வற்புறுத்தல்

Font size: Decrease font Enlarge font
image

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சிகளை பிரதமர் மன்மோகன்சிங் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
 
இதற்காக அவர் சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லுபிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார்.
 
இதை ஏற்று 3 பேரும் இன்று காலை ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள பிரதமர் வீட்டுக்கு சென்று மன்மோகன்சிங்கை சந்தித்தனர். 3 பேரிடமும் மன்மோகன் சிங் மசோதாவை நிறைவேற்ற ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக 3 பேரும் தங்கள் கருத்துக்களை எடுத்து கூறினார்கள்.
 
இறுதியில் பிரதமர் வேண்டுகோளை ஏற்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
 
சந்திப்பு முடிந்து வெளியே வந்த லல்லு பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
நாங்கள் பிரதமரிடம் இந்த மசோதாவை தள்ளி வைக்கும்படி கேட்டுக்கொண்டோம். இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்கும்படியும் கூறினோம். எங்கள் கருத்துக்களை அவர் கவனமுடன் கேட்டுக் கொண்டார்.
 
இப்போதைய மசோதாவுக்கு எங்கள் எதிர்ப்பு தொடர்ந்து நீடிக்கும். நாங்கள் பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பானவர்கள் அல்ல. ஆனால் தேவையான பெண்களுக்கு இந்த பதவி சென்றடைய வேண்டும். அது இப்போதைய மசோதாவில் இல்லாததால்தான் எதிர்க்கிறோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
சரத்யாதவ் கூறும்போது, “எங்கள் கருத்துக்களை பிரதமரிடம் தெளிவாக கூறிவிட்டோம். முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டோர், தலித்துக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான எங்கள் வேதனைகளை அவரிடம் சொல்லி இருக்கிறோம். இந்திய மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் இவர்கள் உள்ளனர். பிரதமர் எங்களை அழைத்ததற்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்றார்.
 
பிரதமர் உங்களிடம் ஏதாவது வாக்குறுதி கொடுத்தாரா? என்று கேட்டதற்கு 3 பேருமே பதில் சொல்ல மறுத்துவிட்டனர்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement