டெல்லி மேல்-சபையில் நடந்த ஓட்டெடுப்பில் அமோக வெற்றி ; பெண்கள் மசோதா நிறைவேறியது

Font size: Decrease font Enlarge font
image

100-வது சர்வதேச மகளிர்தினமான நேற்று முன்தினம், வரலாற்று சிறப்புமிக்க இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதும், மேல்-சபையில் கடும் அமளி ஏற்பட்டது. அடுத்தடுத்து 6 முறை சபை ஒத்திவைக்கப்பட்டதால், இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான ஓட்டெடுப்பு தள்ளி வைக்கப்பட்டது.
 
காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த போதிலும், லாலு பிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ் கட்சிகள் மற்றும் ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி போன்ற கட்சிகள், பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்கள், `தலித்' மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.
 
தற்போதைய நிலையில், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று அந்த கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், 2-வது நாளான நேற்றும் டெல்லி மேல்-சபையில் அமளி நீடித்தது.
 
நேற்று முன்தினம், சபை தலைவரின் மைக்கை உடைத்து கடுமையான அமளியில் ஈடுபட்ட லாலு, முலாயம்சிங், ராம்விலாஸ் பஸ்வான் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் 7 பேர், இந்த கூட்டத்தொடர் முழுவதும் `சஸ்பெண்டு' செய்யப்பட்டனர்.
 
இதனால் ஆவேசம் அடைந்த 7 எம்.பி.க்களும், சபையின் முதன்மை செயலாளர் மேஜையில் இருந்த பொருட்களை அள்ளி வீச முயன்றனர். உடனே சபை காவலர்கள், மனித சங்கிலி அமைத்து அவர்களை சூழ்ந்தபடி, வலுக்கட்டாயமாக அவர்களை சபையில் இருந்து வெளியேற்றினார்கள்.
 
மூன்று முறை ஒத்திவைப்பு, 7 எம்.பி.க்கள் சஸ்பெண்டு நடவடிக்கையை தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு சபை மீண்டும் கூடியது. இதற்கிடையே பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு அதிரடியாக முடிவு செய்தது.
 
அதைத்தொடர்ந்து, சபை கூடியதும் இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா மீது குரல் ஓட்டெடுப்பு நடைபெறும் என்று, சபைத்தலைவர் ஹமீது அன்சாரி அறிவித்தார். பின்னர் பகுதிவாரியாக (டிவிஷன்) ஓட்டெடுப்பு நடைபெறும் என்று அவர் அறிவித்தார்.
 
மசோதாவுக்கு ஆதரவு அளித்து வரும் பா.ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, பெண்கள் இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா மீது விவாதம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
 
அதைத்தொடர்ந்து, பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா மீது விவாதம் தொடங்கியது. மேல்-சபை எதிர்க்கட்சி (பா.ஜனதா) தலைவர் அருண்ஜெட்லி விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார்.
 
ஏறத்தாழ 3 மணி நேரம் நடைபெற்ற விவாதத்திற்கு பின், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 186 உறுப்பினர்களும், எதிராக ஒரே ஒரு உறுப்பினரும் ஓட்டளித்தனர்.
 
மசோதா, மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் நிறைவேறுவதற்கு, மொத்தம் உள்ள 233 உறுப்பினர்களில், 155 பேரின் ஆதரவு தேவை. 186 உறுப்பினர்கள் ஆதரவாக ஓட்டளித்ததை தொடர்ந்து பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா, அமோக ஆதரவுடன் மேல்-சபையில் நிறைவேற்றப்பட்டது.
 
மசோதாவுக்கு எதிராக ஓட்டளித்த ஒரே உறுப்பினர், சுதந்திரபாரத் கட்சியை சேர்ந்த சரத் ஆனந்தராவ் ஜோஷி என்பது குறிப்பிடத்தக்கது. 2 உறுப்பினர்களை கொண்ட திரிணாமுல் காங்கிரஸ், ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது.
 
மசோதா குறித்து தங்கள் கட்சியிடம் கலந்து பேசவில்லை என்றும், இடதுசாரிகளின் நிர்பந்தத்துக்கு அரசு பணிந்து விட்டதாகவும் கூறி, இந்த முடிவு எடுக்கப்பட்டது.
 
பகுஜன்சமாஜ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், தாங்கள் கொடுத்த திருத்தங்கள் மசோதாவில் இடம் பெறாததை கண்டித்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
 
முன்னதாக, மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில், ஜெயந்தி நடராஜன், பிரபா தாகூர் (காங்கிரஸ்), நஜ்மா ஹெப்துல்லா, மாயாசிங் (பா.ஜனதா), கனிமொழி (தி.மு.க.), டாக்டர் வி.மைத்ரேயன் (அ.தி.மு.க.), பிருந்தாகரத் (மார்க்சிஸ்ட் கம்டினிஸ்டு), சதீஷ்சந்திர மிஸ்ரா (பகுஜன் சமாஜ்), ஷிவானந்த திவாரி (ஐக்கிய ஜனதா தளம்), தாரிக் அன்வர் (தேசியவாத காங்கிரஸ்), டி.ராஜா (இந்திய கம்டினிஸ்டு), மைசூரா ரெட்டி (தெலுங்கு தேசம்), மனோகர் ஜோஷி (சிவசேனா), பி.எம்.மகபாத்ரா (பிஜறு ஜனதா தளம்), நரேஷ் குஜ்ரால் (சிரோன்மணி அகாலிதளம்), வீரேந்திரபிரசாத் பைஷ்யா (அசாம் கணபரிஷத்) மற்றும் பல உறுப்பினர்கள் பேசினார்கள்.
 
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா, ஏற்கனவே மூன்று முறை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களினால் அதை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடித்து வந்தது. கடந்த 13 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த இந்த மசோதா, தற்போது மேல்-சபையில் அதிரடியாக நிறைவேற்றப்பட்டு இருப்பது, இந்திய ஜனநாயக வரலாற்றில் முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.
 
பாராளுமன்ற மக்களவையில், இந்த மசோதா வேறு ஒரு தேதியில் தாக்கல் செய்யப்பட்டு ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும். அதைத்தொடர்ந்து, பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமலுக்கு வரும்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement