மத்திய அரசு மீது “நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரமாட்டோம்” முலாயம்சிங்-லல்லுபிரசாத் அறிவிப்பு
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா டெல்லி மேல் -சபையில் நேற்று நிறை வேற்றப்பட்டது. முன்னதாக அந்த மசோதாவுக்கு லல்லு பிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ் கட்சிகள் மற்றும் ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி போன்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் மற்றும் சிறு பான்மையினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால் இந்த உள் ஒதுக்கீடு வழங்காமல் தற்போ துள்ள நிலையிலேயே மசோதா நிறைவேறியதால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என லல்லு பிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
மேலும் இவர்கள் மத்திய அரசு மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இது குறித்து ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லல்லுபிரசாத் யாதவிடம் நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த அவர், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் அளவுக்கு எங்கள் கட்சியில் போதுமான எம்.பி.க்கள் இல்லை. 4 பேர் மட்டுமே உள்ளனர். எனவே, அது போன்ற தீர்மானம் கொண்டு வரும் எண்ணம் இல்லை. இது குறித்து வெளியான தகவல் தவறானது” என்றார்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறும் போது, “தற்போது அது போன்ற எண்ணம் எதுவும் இல்லை. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் அளவுக்கு பாராளுமன்றத்தில் எங்கள் கட்சிக்கு எம்.பி.க்கள் இல்லை. 21 பேர் மட்டுமே உள்ளனர்” என்று கூறினார்.
மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற போவதாக விடுத்த மிரட்டல் குறித்தும் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், இது தொடர்பாக ஜனாதிபதி பிரதீபா பட்டீலை சந்திக்கும் எண்ணம் இல்லை என்று கூறினார். இது குறித்த தகவல்களை அவர் வெளியிடாமல் நழுவி விட்டார். லல்லு பிரசாத் யாதவ் கூறும் போது, “ஜனாதிபதி பிரதீபா பட்டீலை சந்திக்க அனுமதி கேட்டு இருக்கிறோம். ஆனால் அதற்கான நேரம் இன்னும் ஒதுக்கப்படவில்லை” என்றார்.



del.icio.us
Digg
