பெண்கள் மசோதா பாராளுமன்றத்தில் இன்றும் அமளி; இரு சபைகளும் ஒத்தி வைப்பு

Font size: Decrease font Enlarge font
image

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதையும் மீறி நேற்று முன் தினம் மேல்சபையில் இட ஒதுக்கீடு மசோதா நிறை வேற்றப்பட்டது.
 
ஆனாலும் இந்த கட்சிகள் தங்கள் மோதல் போக்கை கைவிடவில்லை. நேற்றும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டன.
 
இன்றும் சபை கூடியதும் அவர்கள் அமளியில் குதித்தனர்.
 
பாராளுமன்றத்தில் இது தொடர்பாக அவர்கள் பிரச்சினை கிளப்பியதும் சபாநாயகர் மீராகுமார் 3 கட்சி தலைவர்களும் சபையில் பேச அனுமதி வழங்கினார்.
 
சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் பேசினார்கள்.
 
முலாயம் சிங் பேசும் போது, அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்து இல்லாமல் இந்த மாசோதாவை நிறைவேற்றக்கூடாது என்றார்.
 
லல்லு பிரசாத் கூறும் போது, பெண்கள் மசோதா விஷயத்தில் காங்கிரஸ்- பாரதீய ஜனதா கட்சிகள் சேர்ந்து சதி செய்து விட்டனர். இந்த மசோதாவால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றார்.
 
அவர்கள் பேசும்போது, இடைஇடையே கடும் வாக்கு வாதம் நடந்தது.
 
இதை தொடர்ந்து மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி பதில் அளித்து பேசினார்.
 
அவர், மசோதா தொடர்பாக அனைத்து கட்சிகளுடனும் மத்திய அரசு பேச தயாராக இருக்கிறது. அனைத்து தரப்பில் இருந்து ஒருமித்த கருத்து வந்த பிறகே சட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் என்றார்.
 
ஆனால் இந்த விளக்கத்தை 3 கட்சிகளும் ஏற்க மறுத்து விட்டன. முலாயம் சிங், லல்லு பிரசாத் மற்றும் அவரது கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். சபையின் மைய பகுதிக்கு சென்று தலித் விரோத அரசு நீடிக்கக்கூடாது என்று கூறி கோஷமிட்டனர்.
 
இதனால் சபாநாயகர் மீராகுமார் சபையை பகல் 12 மணி வரை ஒத்தி வைத்தார். மீண்டும் சபை கூடிய போதும் அமளி நீடித்தது. இதனால் சபையை 2 மணி வரை ஒத்தி வைத்தார்.
 
மேல்சபையில் நேற்று முன்தினம் சஸ்பெண்டு செய்யப்பட்ட 7 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பாரதீய ஜனதா, கம்யூனிஸ்டு, அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் சபை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

  • email Email to a friend
  • print Print version
Advertisement