ஐதராபாத்தில் 3 ஆண்டுகளாக தேடப்பட்ட தீவிரவாதி பிடிபட்டான்; 4 போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்றவன்

Font size: Decrease font Enlarge font
image

ஐதராபாத்தில் 2007-ம் ஆண்டு மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. இது தொடர்பாக சையத் விகா ருதீன் என்ற தீவிரவாதியை போலீசார் தேடி வந்தனர். மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்கு பழி வாங்க ஒவ்வொரு ஆண்டும் போலீஸ்காரர்களை சுட்டு கொன்று வந்தான்.
 
3 ஆண்டுகளாக இவன் போலீசில் சிக்காமல் தலை மறைவாக இருந்தான். நேற்று ஐதராபாத்தில் ஷாலி பண்டா என்ற இடத்தில் ஒரு வீட்டில் இருந்து காய்கறி வாங்க சென்ற போது 40 பேர் கொண்ட போலீஸ் படை அவனை சுற்றி வளைத்து கைது செய்தது. அவன் போலீசைப் பார்த்ததும் துப்பாக்கியால் சுட்டு தப்ப முயற்சி செய்தான். ஆனால் போலீசார் அவனை தப்ப விடாமல் மடக்கி பிடித்தனர்.
 
அவனுக்கு வீடு வாடகைக்கு கொடுத்த டாக்டர் அணீஸ், உறவினர் சுலைமான் மற்றும் பல்வேறு உதவிகள் செய்த ரியாஸ், சயீத் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
 
இவர்களிடம் இருந்து 3 கைத்துப்பாக்கி, 4 பிஸ்டல், 35 ரவுண்ட் சுடக்கூடிய துப்பாக்கி குண்டுகள், கத்தி, சி.டி.க்கள், பென்டிரைவ், 4 இரு சக்கர வாகனங்கள், 2 போலி நிருபர் அடையாள அட்டை ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.
 
கைதான விகாருதீன் ஐதராபாத் ஒல்டு மலக்பேட்டையைச் சேர்ந்தவன். தந்தை பெயர் முகமத் அகமது, ஐதராபாத்தில் ரகசியமாக செயல்படும் ஜிகாதி-ஏ- சதக் இயக்கத்தில் தீவிர உறுப்பினராக இருந்தான். அவனுடன் கைதான 4 பேரும் இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள். விகாருதீன் வங்காள தேசத்தில் தீவிரவாத பயிற்சி பெற்றான்.
 
விகாருதீன் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-
 
ஐதராபாத்தில் 2007-ம் ஆண்டு மெக்கா மசூதி குண்டு வெடிப்பின் போது 5 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். உண்மையான குற்றவாளிகளை விட்டு விட்டு இவர்களை சுட்டுக் கொன்றதால் போலீசை பழி வாங்க திட்டமிட்டேன்.
 
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மே 18-ந்தேதி அன்று ஐதராபாத்தில் போலீஸ்காரரை சுட்டுக் கொன்றேன். இதுவரை 3 போலீஸ்காரர்களை கொன்று இருக்கிறேன்.
 
இந்திய அரசியல் சட்டத்தை நீக்கிவிட்டு ஷரியத் சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு செயல்பட்டோம். இதற்காக வங்காள தேசத்தில் தீவிரவாத பயிற்சி பெற்றேன். அங்கு எனக்கு துப்பாக்கியால் சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.
 
இவ்வாறு தீவிரவாதி கூறியுள்ளான்.
 
கைதான விகாருதீன் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த வங்கி கொள்ளையிலும் தொடர் புடையவன் அப்போது ஒரு போலீஸ்காரரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தப்பி ஓடிவிட்டான்.
 
ஐதராபாத்தில் 3 ஆண்டுகளாக மாறு வேடத்தில் தலை மறைவாக இருந்தான். யாருடனும் அதிகம் பேச மாட்டான். தன்னை என்ஜினீயர் என்று அருகில் இருப்பவர்களிடம் கூறி வந்துள்ளான்.
 
இவனைப் பிடிக்க டெல்லி உளவு பிரிவு, மாநில உளவு பிரிவு உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த போலீசார் ஈடுபட்டனர். பெற்றனர். இவர்கள் 3 ஆண்டுகாக விகாருதீனை தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • email Email to a friend
  • print Print version
Advertisement