இலங்கை தூதரகத்தை இழுத்து மூடும் போராட்டம்: வைகோ, பழ.நெடுமாறன் கைது; ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு

Font size: Decrease font Enlarge font
image

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் படுகொலை செய்வதை கண்டித்து சென்னை மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இலங்கை அரசையும், அந்நாட்டு அதிபர் ராஜபக்சேயையும் கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், பெரியார் திராவிடக் கழக பொது செயலாளர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
 
ஆர்ப்பாட்டத்தில் மு.நடராஜன், தபசிகுமரன், சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. நிர்வாகிகள் மாசிலாமணி, மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், பாலவாக்கம் சோமு, ஜீவன், செங்குட்டுவன், அமைப்பு செயலாளர் சீமா பஷீர், பீடா ரவி உள்பட ஏராள மானோர் பங்கேற்றனர்.
 
அப்போது “இலங்கை தூதரகத்தை சென்னையை விட்டு வெளியேற்று, சிங்கள தூதரகத்தை விரட்டியடிப் போம், என்ற கோஷங்களும், இலங்கை அரசுக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டன.
 
ஆர்ப்பாட்டத்தின் போது வைகோ பேசியதாவது:-
 
தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் தினமும் தாக்குவது வாடிக்கை ஆகிவிட்டது. மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கின்றன. இலங்கை பற்றி விமர்சிக்க கூடாதாம், சீமான் பேசியது தேசதுரோகமா?
 
அடக்குமுறையை ஏவி கைது செய்ததன் மூலம், தமிழர்களின் உணர்வுகளை அடக்க முடியாது. இந்தியாவை பற்றி தான் விமர்சிக்க கூடாது என்றார்கள். இப்போது இலங்கையை பற்றியும் விமர்சிக்க கூடாது என்றால் எப்படி ஏற்க முடியும். இங்குள்ள தமிழர்கள் இலங்கை சென்று சிங்களர்களை எதிர்த்து போராடும் காலம் வரும்.
 
இவ்வாறு வைகோ பேசினார்.
 
பழ.நெடுமாறன் பேசும் போது, “இலங்கை தமிழர்கள் பிரச்சினை தான் கண்ணீர் ஆனது என்றால், தமிழக மீனவர்கள் நிலையும் கண்ணீராக மாறுகிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றார்.
 
தா.பாண்டியன்: “இலங்கையில் தமிழர்கள் செத்து மடிந்த போதும் இந்தியா வேடிக்கை பார்த்தது. இப்போது தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதும் இந்தியா வேடிக்கை பார்க்கிறது. மீனவர்களை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். தமிழகம் முழுவதும் இந்த போராட்டத்தை விரிவு படுத்துவோம் என்று கூறினார்.
 
ஆர்ப்பாட்டம் நடந்த போது, அதில் சிலர் ராஜபக்சே கொடும்பாவி எரித்தனர். போலீசார் அணைக்க முயன்றனர். ஆனால் ம.தி.மு.க. தொண்டர்கள் சூழ்ந்து நின்றதால் அதை அணைக்க முடியவில்லை. ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அனைவரும் இலங்கை தூதரகத்தை மூடுவதற்காக செல்ல முயன்றனர்.
 
போலீசார் தடுத்தும் யாரும் நிற்கவில்லை. எனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ, பழ.நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன், சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
 
பின்னர் அவர்களை போலீசார் வேன்களில் ஏற்றி கொண்டு சென்றனர்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement