“மும்பை தாக்குதல் தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது” பாக்.அதிபர் சர்தாரி அறிவிப்பு

Font size: Decrease font Enlarge font
image

 5 நாள் பயணமாக சீனா சென்றுள்ள பாகிஸ்தான் அதிபர் ஆசிப்அலி சர்தாரி அங்கு ஒரு டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
மும்பையில் நடந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் ஈடுபட்டதாக இந்தியா தெரிவிக்கிறது. அந்த நபர்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி வலியுறுத்தி வருகிறது. அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது.
 
இதுகுறித்து இருநாடுகளுக்கு இடையே இதுபோன்ற ஒப்பந்தம் எதுவும் இல்லை. இது எங்கள் வேலை அல்ல. மும்பை தாக்குதலில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவிக்கும் நபர்களை (தீவிர வாதிகளை) பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம். அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன்.
 
இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே அமைதி பேச்சு வார்த்தை நடைபெற கூடாது என்று விரும்புபவர்கள் மும்பை தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம்.
 
இந்தியா ஒரு அனுபவம் வாய்ந்த, முதிர்ச்சி அடைந்த ஜனநாயக நாடு. அவர்கள் இதை புரிந்து கொண்டு அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும்.
 
மும்பையில் தாக்குதல் நடந்தபோது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி டெல்லிக்கு சென்று இருந்தார். இதன் மூலம் தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் செயல்படுகிறது என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்.
 
எனவே இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் இருக்க பாகிஸ்தான் விரும்புகிறது. ஏனெனில் இந்தியா எங்களின் பெரிய அண்டை நாடு. நாம் அனைவரும் தெற்காசிய நாடுகள். எனவே அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
 
ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் செயல்பாட்டை பாகிஸ்தான் எதிர்க்கவில்லை. ஆப்கானிஸ்தான் ஒரு திறமையான நாடு. ரெயில் பாதை மற்றும் ரோடுகள் அமைப்பதன் மூலம் சீனா- பாகிஸ்தான் இடையே ஒத்துழைப்பு வளரும்.
 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement