பென்னாகரம் தேர்தல் பிரசாரம்: போலீசாருடன் பா.ம.க.வினர் மோதல்; அன்புமணி உள்பட 150 பேர் மீது வழக்கு
பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இன்றுடன் மனுதாக்கல் முடிவடைந்தது.
இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் இன்பசேகரன், பா.ம.க. சார்பில் தமிழ்க்குமரன், அ.தி.மு.க. சார்பில் அன்பழகன், தே.மு.தி.க.சார்பில் காவேரிவர்மன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
தேர்தலையொட்டி பென்னாகரம் தொகுதியில் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை நடத்தப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. அவ்வாறு நடத்தப்படும் சோதனையை போலீசார் வீடியோ காமிரா மூலமும் பதிவு செய்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் இரவு பென்னாகரம் தொகுதிக்கு காரில் சென்ற பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாசின் காரை இண்டூர் செக்போஸ்டில் நிறுத்திய போலீசார் காரை சோதனை நடத்த வேண்டும் என்றனர்.
இதற்கு உடன் வந்த பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்தனர். இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களை சமரசம் செய்து வைத்தனர்.
செக்போஸ்ட் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் லட்சுமணன் என்பவர் இண்டூர் போலீசில் பா.ம.க.வினர் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்தனர் என்று புகார் செய்தார். அதன்பேரில் பா.ம.க. ஒன்றிய செயலாளர் உள்பட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று பகல் 12 மணியளவில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரத்துக்காக தர்மபுரியில் இருந்து பென்னாகரத்துக்கு காரில் புறப்பட்டார்.
அவரது காரை தொடர்ந்து ஏராளமான பா.ம.க.வினர் பின்னால் அணிவகுத்து வந்தனர். அன்புமணியின் கார் இண்டூர் செக்போஸ்ட் அருகே வந்த போது போலீசார் அன்புமணியின் காரை சோதனையிட வேண்டும் என்றனர்.
அப்போது அங்கு இருந்த போலீசாரிடம் அன்புமணி டாக்டர் அய்யா, எனது காரையும் சோதனை நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். நீங்கள் ஏன் என் காரை சோதனை நடத்துகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
அந்த நேரம் தி.மு.க. அமைச்சர் கார் ஒன்று வந்துள்ளது. அந்த காரை செக்போஸ்டில் இருந்த போலீசார் நிறுத்தி சோதனை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதைபார்த்த அன்பு மணி ராமதாஸ் காரை விட்டு கீழே இறங்கி போலீசாரிடம் அமைச்சரின் காரை மட்டும் ஏன் நீங்கள் சோதனை நடத்தவில்லை என்றார். அப்போது அன்புமணிக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைப்பார்த்த பா.ம.க. தொண்டர்கள் அங்கு திரண்டு வந்தனர். சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பா.ம.க.வினர் அங்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது.
அப்போது ஆத்திரம் அடைந்த பா.ம.க.வினர் அன்பு மணியை காரில் ஏறி அமர வைத்து போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்த பா.ம.க. தொண்டர்கள் போலீசாரை தாக்கி செக்போஸ்டை அடித்து உடைத்தனர். இதனால் பா.ம.க. தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் போலீஸ் படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். நிலைமை மோசமானதை அடுத்து அவர் தடியடி நடத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து பா.ம.க.வினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பள்ளப்பட்டியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் பெரியசாமி (வயது 42), கெட்டு அள்ளியை சேர்ந்த முருகேசன் (49), இ.கே. புதூரை சேர்ந்த பெரியண்ணன் (38), தமிழரசு எம்.எல்.ஏ.வின் கார் டிரைவர் தாதாபீர் (27). இவர்கள் தவிர ரத்தினம், வடமாலை, கஸ்தூரி ஆகிய 7 பேர் காயம் அடைந்தனர்.
இதுப்பற்றி தெரியவந்ததும் அங்கு தர்மபுரி கலெக்டர் அமுதா, தேர்தல் பார்வையாளர் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது தேர்தல் பார்வையாளர் காரை முற்றுகையிட்டு பா.ம.க.வினர் மறியல் செய்தனர். இதன் காரணமாக பென்னாகரம்-ஒகேனக்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே தர்மபுரி தாசில்தார் ராமதுரை முருகன் இண்டூர் போலீசில் பா.ம.க.வினர் மீது புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் எம்.எல்.ஏ. ஜி.கே. மணி, எம்.எல்.ஏக்கள் இளவரசன், தமிழரசு,மற்றும் மாநில இளைஞர் அணி செயலாளர் இரா. அருள், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் பெரியசாமி, உள்பட 150 பேர் மீது வழக்குப் பதிவுசெய்து உள்ளனர்.
அவர்கள் மீது 147 (அனுமதியின்றி கூடுதல்), 341 (தடுத்தல்), 353 (அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல்), 332 (கையால் தாக்குதல்), 323 (ஆபாசமாக பேசுதல்), 294 (பி) ( குடிபோதையில் கெட்ட வார்த்தையால் பேசுதல்), 506 (1) (கொலைமிரட்டல்), 188 (சாலை மறியல் செய்தல்), 3 ஆப். பி.பி.டி ஆக்ட் (பொது சொத்துக்களை சேதப்படுத்துதல்) ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தடியடியில் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை ராமதாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது நிருபர்களிடம் பேசிய ராமதாஸ் பா.ம.க. வினர் தாக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் கமிஷனில் புகார் செய்வேன் என்றார்.
பா.ம.க. தொண்டர்கள் தாக்கியதில் எஸ்.ஐ. நவாஸ். ஏட்டுகள் தீபா, உதயகுமார், மலர்க்கொடி, செல்வி, உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களை டி.ஐ.ஜி. வெங்கட்ராமன், போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் பார்த்து ஆறுதல் கூறினார்கள்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பென்னாகரம் தொகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது. இதனால் அதிக அளவில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



del.icio.us
Digg
