கோவா
வெள்ளைக்கார பெண்களை மணந்து வெளிநாட்டில் செட்டில் ஆக துடிக்கும் மூன்று இளைஞர்கள் கதை...
ஜெய், வைபவ், பிரேம்ஜி மூவரும் தேனி பக்கம் உள்ள பண்ணையபுரம் கிராமத்தில் வசிக்கும் நண்பர்கள். ஊர் கட்டுப்பாட்டை அடிக்கடி மீறி பஞ்சாயத்தார் கோபத்துக்கு ஆளாகின்றனர். ஒருத்தருக்கொருத்தர் பேசக் கூடாது என பஞ்சாயத்து தடை போடுகிறது.
எரிச்சலாகும் மூவரும் கோவில் நகைகளை திருடி மதுரைக்கு ஓடுகின்றனர். அங்கு நண்பன் ஒருவன் வெள்ளைக்கார பெண்ணை மணந்து வெளிநாட்டுக்கு குடி பெயர்வதை அறிந்து நப்பாசை. கோவா போய் வெள்ளைக்கார பெண்களை காதலித்து திருமணம் செய்து லண்டன் போய் விட திட்டம் வகுக்கின்றனர். ஆடுகள் ஏற்றி வரும் லாரியில் கோவா வந்து இறங்குகின்றனர்.
அங்கு விடுதி நடத்தும் சம்பத்தும், அரவிந்த் ஆகாசும் உதவுகின்றனர். பிரேம்ஜிக்கும் வெள்ளைக்கார பெண் மெலானிக்கும் காதல் மலர்கிறது. ஜெய்யை கிளப் டான்சர் பியா விரும்புகிறார். வைபவுக்கும் பெண் தொழில் அதிபர் சினேகாவுக்கும் காதல் துளிர்க்கிறது.
யார், யார் காதல் ஜெயித்தது என்பது கிளைமாக்ஸ்...
சென்னை 28, சரோஜா என கனமான கதைகள் சொன்ன வெங்கட் பிரபு, இதில் முழுக்க காமெடியை கையில் எடுத்துள்ளார்.
பண்ணையபுரம் பஞ்சாயத்து கூட்டமும் ஜெய், வைபவ், பிரேம்ஜியின் குறும்புத்தனங்களின் குற்றவாசிப்புமாக ஆரம்பமே அமர்க்களம்... பிரேம்ஜியை சாமி என்று ஊரார் கொண்டாடுவது ரகளை...
மதுரையில் வெளிநாட்டவர்கள் பட்டு வேட்டி, பட்டு சேலை சகிதத்துடன் திருமண மண்டபத்தில் குழுமியிருக்க நண்பன் வெள்ளைக்கார பெண்ணுக்கு தாலி கட்டும் வைபவமும் அதேபோல் தங்களுக்கும் பெண் அமைய நண்பர்கள் மூவரும் திட்டம் வகுப்பதும் ஆரவாரம்.
கதை கோவா பறந்ததும் அரைகுறை இளசுகளின் ஆட்டம் பாட்டமாக இளமை படையலிடுகிறது. வெள்ளைக்கார பெண்களை மூவரும் “கரெக்ட்” செய்வதிலேயே காட்சிகள் நகர்வது சலிப்பு. சம்பத்துக்கும் பிரேம்ஜிக்கும் தவறான உறவு என அரவிந்த் ஆகாஷ் அர்த்தம் கற்பிப்பது தமாஷாக இருந்தாலும் இன்னொரு புறம் முகம் சுளிக்கிறது.
ஜெய்-பியா காதல் கவிதை. பிரேம்ஜி-மிலானி சந்திப்பும் “கண்கள் இரண்டால்” பாடல் பின்னணியில் பூக்கும் காதல் உணர்வுகளும் கலகலப்பானவை...
சினேகா வருகைக்கு பின் கதை றெக்கை கட்டுகிறது. கடலில் சொந்தமாக சூதாட்ட கப்பல் வைத்து தொழில் செய்யும் அவர் அடிக்கடி புருஷன்களை மாற்றுவதும்... வைபவை மணந்து அடித்து சித்ரவதை செய்வதும் விறு விறுப்பானவை...
பிரேம்ஜி கிராமத்து கோவிலில் திருடி வந்த தங்க கிரீடத்தை சினேகாவுக்கு வைபவ் காதல் பரிசாக கொடுப்பதும் அதை அவர் யாரும் புக முடியாத கப்பலுக்குள் பதுக்குவதும் அந்த கிரீடத்தை மீட்க நண்பர்கள் நடத்தும் கிளைமாக்ஸ் போராட்டமும் விறுவிறுப்பானவை... மன்மதன் ஸ்டைலில் சிம்பு ஒரு சீனில் தலைகாட்டி சினேகா கதையை முடிப்பது ஆரவாரம். நயன்தாரா “கிளைமாக்ஸ்” பஞ்சாயத்து கூட்டத்தில் தலைகாட்டி போகிறார். சினேகாவின் முன்னாள் கணவராக வருகிறார் பிரசன்னா.
ஜெய் யதார்த்தமான கேரக்டரில் பளிச்சிடுகிறார். பிரேம்ஜி காமெடியில் வழக்கமான பரிணாமம். “வைபவ்-சினேகா படுக்கை அறை “சீன்” சூடேற்றும் ரகம். சம்பத் வித்தியாசமான நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார். பியா பூரிப்பான காதலி.
காமெடியோடு திகில், திருப்பங்களுடன் திரைக்கதை நகர்ந்திருந்தால் விறுவிறுப்பு ஏறி இருக்கும்.
யுவன் சங்கர்ராஜா இசை கை கொடுக்கிறது. சக்தி சரவணன் கேமரா கோவா அழகை அள்ளுகிறது. ரஜினி மகள் சவுந்தர்யா தயாரித்துள்ளார்.



del.icio.us
Digg
