தங்கத்தின் விலை மேலும் சரிவு; ஒரே நாளில் பவுனுக்கு ரூ.424 குறைந்தது

Font size: Decrease font Enlarge font
image

 தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.424 குறைந்தது. ஒரு பவுன் ரூ.12 ஆயிரத்து 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக `புயல்' வேகத்தில் அதிகரித்து வந்தது. காலையில் குறைந்த அளவில் விலை உயரும் தங்கம், மாலையில் அதிக அளவில் உயர்ந்து வருவது அன்றாட கதையாக இருந்து வந்தது.
 
தற்போது, 4 நாட்களாக தங்கத்தின் விலை குறைய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.1,554-க்கும், பவுன் 12 ஆயிரத்து 432-க்கும் விற்பனை ஆனது. இந்த நிலையில் நேற்று தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சி அடைந்தது.
 
அதாவது, ஒரு கிராம் ரூ.1,501-க்கும், ஒரு பவுன் 12 ஆயிரத்து 8 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.424 ரூபாய் குறைந்து உள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் பவுனுக்கு 804 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக தங்கத்தின் விலை இந்த அளவுக்கு குறைந்ததே கிடையாது.
 
`ஜெட்' வேகத்தில் அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது வீழ்ச்சி அடைந்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த விலை குறைவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்களின் பெற்றோர் போட்டி போட்டு திருமணத்திற்கான நகைகளை வாங்கினர். இதனால், நேற்று நகை கடைகளில் வழக்கத்தை விட அதிகமான கூட்டம் காணப்பட்டது.
 
இது குறித்து தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பு முக்கிய ஆலோசகர் எல்.கே.எஸ்.சையது அகமது கூறுகையில், "சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து உள்ளது. குறைந்த முதலீடு செய்து தங்கத்தை வாங்கி குவித்து வந்தவர்கள், தற்போது அதனை விற்று வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. இந்த நிலை இன்னும் 1 மாதத்திற்கு நீடிக்கும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்'' என்றார்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement