பி.எஸ்.என்.எல். சென்னை தொலைபேசி சார்பில் `3ஜி' சேவை சென்னையில் அறிமுகம் எதிர்முனையில் பேசுபவரின் முகத்தை பார்த்தபடி பேசலாம்
சென்னை, நவ.22-
தென் இந்தியாவில் முதல்முறையாக, செல்போனில் எதிர் முனையில் பேசுவோரின் முகத்தைப் பார்க்கும் வசதியுடன் கூடிய பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் `3ஜி' சேவை வர்த்தக ரீதியாக தொடங்கப்பட்டு உள்ளது.
அதி நவீன சேவை
செல்போனில் எதிர்முனையில் பேசுவோரின் முகத்தைப்பார்த்தவாறு பேசக்கூடிய 3ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய சேவை தென் இந்தியாவில் சென்னையில் தொடங்கப்பட்டு உள்ளது. சென்னையில் நடந்த விழாவில், தொலைத்தொடர்புத்துறை பி.எஸ்.என்.எல். தென் இந்திய முதன்மைப் பொதுமேலாளர் (திட்டங்கள்) பி.ஆர்.ஆனந்தன் இந்த சேவையைத் தொடங்கி வைத்தார்.
வர்த்தக ரீதியிலான சேவையை, சென்னை தொலைபேசி தலைமைப்பொது மேலாளர் ஏ.சுப்பிரமணியம் தொடங்கி வைத்ததார்.
செயல்பாடுகள்
`3ஜி' சேவையின் செயல்பாடுகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து, சென்னை தொலைபேசி தலைமைப் பொதுமேலாளர் ஏ.சுப்பிரமணியம் கூறியதாவது:-
பி.எஸ்.என்.எல். 3ஜி சேவை கடந்த பிப்ரவரி மாதம் முதல்-அமைச்சர் கருணாநிதி, மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா ஆகியோர் தொழில் நுட்ப ரீதியாக தொடங்கி வைத்தனர். வர்த்தக ரீதியாக, தென் இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் இப்போது தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இன்னும் ஓரிரு மாதங்களில் ஏறக்குறைய ஒரு லட்சம் சந்தாதாரர்கள் 3ஜி சேவையை பயன்படுத்துவார்கள் என்று கருதுகிறோம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த சேவைக்காக 304 செல்போன் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் 256 உயர் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. இந்த பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடைந்து விடும்.
காஞ்சீபுரம், திருவள்ளூர்
காஞ்சீபுரம், திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, மேல்மருவத்தூர், பள்ளிப்பட்டு, பொன்னேரி, உத்திரமேரூர், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் 3ஜி சேவை கிடைக்கும் வகையில் உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கோவையில் இந்த சேவையை வழங்குவதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் நிறைவுபெறும். அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த சேவை படிப்படியாக கொண்டுவரப்படும்.
இவ்வாறு ஏ.சுப்பிரமணியம் கூறினார்.
எதிர்முனையில் பேசுபவர் முகம்
இந்த சேவையின் மூலம் செல்போனில் எதிர் முனையில் பேசுபவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டே பேசலாம். அதேபோல், விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நேரடியாக பார்க்கலாம்.
வர்த்தக நிறுவனங்கள் எந்த நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் அதன் செயல்பாடுகளை உரிய அலைவரிசையுடன் கூடிய கேமரா பொருத்தியிருந்தால் சென்னையில் இருந்தவாறு செல்போனிலேயே காணலாம்.
1000 விண்ணப்பங்கள் இதுவரையில் 3ஜி சேவை கேட்டு 1000 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இப்போது 2 ஜி சேவையில் உள்ள வாடிக்கையாளர்கள் 3ஜி சேவைக்கு மாறினாலும் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்திவரும் செல்போன் எண்ணே தொடரும்.
பேச்சு மற்றும் வீடியோ உள்ளூர் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 30 காசு கட்டணம் வசூலிக்கப்படும். தேசிய அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 50 காசு கட்டணம் வசூலிக்கப்படும். பி.எஸ்.என்.எல். `3ஜி' சேவை சென்னையில் பிரிபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். பிரிபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டுக்கான சிம் கட்டணம் 59 ரூபாய்.
யார்-யார்?
இந்த விழாவில் தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்ட முதன்மைப்பொதுமேலாளர் வரதராஜன், பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தின் 3 ஜி சேவைக்குத் தேவையான தொழில் நுட்ப சாதனங்களை வழங்கும் ஹூவாவேய்-இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவர் லிïஜான், அடையார் ஆனந்தபவன் நிர்வாக இயக்குநர் கே.டி.வெங்கடேசன் மற்றும் தென் இந்திய தொழில் வர்த்தக சம்மேளனத் துணைத்தலைவர் ஜவஹர் வடிவேலு உள்பட வர்த்தக பிரமுகர்களும், பி.எஸ்.என்.எல். உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



del.icio.us
Digg