டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியாவின் சோம்தேவ் தோல்வி

Font size: Decrease font Enlarge font
image

டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப்பின் முதலாவது சுற்றில் இந்தியா-ரஷியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் நேற்று தொடங்கியது. இதன் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீரர் சோம்தேவ் வர்மன், ரஷியாவின் இகோர் ஆண்ட்ரீவுடன் மோதுவதாக இருந்தது. ஆனால் மூட்டு காயத்தால் ஆண்ட்ரீவ் அவதிப்பட்டதால், அவருக்கு பதிலாக மற்றொரு ரஷிய வீரர் இகோர் குனிட்சின் இறங்கினார்.
 
தொடக்கத்தில் சோம்தேவின் கட்டுப்பாட்டில் ஆட்டம் இருந்தது. முதல் செட்டை டைபிரேக்கர் வரை சென்று கைப்பற்றி, 2-வது செட்டிலும் 5-2 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றிருந்தார். ஆனால் அதன் பிறகு சுதாரித்து கொண்ட குனிட்சின், உறுதியுடன் விளையாடி சரிவில் இருந்து மீண்டார். அவர், தொடர்ச்சியாக 3 கேம்களை வென்று சமனுக்கு கொண்டு வந்ததால், 2-வது செட்டும் டைபிரேக்கருக்கு போனது. அதனை தனதாக்கிய குனிட்சின், அடுத்த 2 செட்களையும் தன்வசப்படுத்தி வெற்றிக்கனியை பறித்தார்.

சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தில் இகோர் குனிட்சின் 6-7 (8), 7-6 (4), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சோம்தேவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து நடந்த 2-வது ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் ரோகன் பொபண்ணா 4-6, 2-6, 3-6 என்ற நேர் செட்டில் ரஷியாவின் மிகைல் டிஸ்னியிடம் வீழ்ந்தார். இதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்த போட்டியில் ரஷியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது நாளான இன்று இந்தியாவின் லியாண்டர் பெயஸ்-மகேஷ் பூபதி ஜோடி களம் காண உள்ளது.

 

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement