20 ஓவர் உலக கோப்பை பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி இலங்கையை வீழ்த்தியது
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
இதில் முன்னாள் சாம்பியன் இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசி லாந்து, இங்கிலாந்து, இலங்கை, வங்காள தேசம், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 12 நாடுகள் பங்கேற்றுள்ளன.
அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் இடம் பெற்றன. “லீக் முடிவில் 4 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் “சூப்பர்8” சுற்றுக்கு தகுதி பெறும்.
நேற்றைய தொடக்க ஆட்டத்தில் “பி” பிரிவில் உள்ள இலங்கை-நியூசிலாந்து அணிகள் மோதின. “டாஸ்” வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஜெயவர்த்தனே ஒருவரே அதிரடியாக ஆடினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இலங்கை அணியால் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்னே எடுக்க முடிந்தது. ஜெயவர்த்தனே 51 பந்தில் 81 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரியும், 2 சிக்சரும் அடங்கும்.
ஒரு ஒவருக்கு 6.8 ரன் தேவை என்ற நிலையில் நியூசிலாந்து பின்னர் களம் இறங்கியது. ஆட்டத்தின் முதல் ஒவரிலேயே அதிரடி பேட்ஸ்மேன் பிரண்டன் மேக் குல்லம் ஆட்டம் இழந்தார்.
2-வது விக்கெட்டான ரைடர்-குபதில் ஜோடி பொறுப்புடன் ஆடியது. ரைடர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் 27 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 42 ரன்னில் அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து குப்தில் 19 ரன்னிலும், டெய்லர் 9 ரன்னிலும், ஸ்டைரிஸ் 17 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
இதனால் 16.2 ஓவரில் நியூசிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 96 ரன் என்ற நெருக்கடி நிலையில் இருந்தது 28 பந்தில் 40 ரன் தேவை என்ற நிலை இருந்தது.
மெண்டீஸ் வீசிய ஓவரில் ஜேக்கப் ஒரம் அதிரடியாக 2 சிக்சர் விளாசினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடைசி 2 ஓவரில் நியூசிலாந்து வெற்றிக்கு 20 ரன் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஒரம் அவுட் ஆனார். 2-வது பந்தில் ஹாப்துன்ஸ் “ரன்அவுட்” ஆனார். 8-வது விக்கெட்டுக்கு கேப்டன் வெட்டோரியுடன், நாதன் மேக்குல்லம் ஜோடி சேர்ந்தார். அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி திருப்புமுனை ஏற்படுத்தினார்.
கடைசி ஓவரில் 10 ரன் தேவைப்பட்டது. மலிங்கா பந்து வீசினார். முதல் பந்தில் மேக்குல்லம் 1 ரன் எடுத்தார். 2-வது பந்தில் எக்ஸ்டரா மூலம் ஒரு ரன் கிடைத்தது. இதில் பந்தில் வெட்டோரியை ரன் அவுட் செய்ய தவறினார். 3-வது பந்தில் மேக்குல்லம் பவுண்டரி அடித்தார். 4-வது பந்தில் 2 ரன் எடுக்கும் முயற்சியில் வெட்டோரி “ரன்அவுட்” ஆனார். இதனால் 2 பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தில் மேக்குல்லம் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
நியூசிலாந்து 19.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்து 2 விக்கெட்டில் வெற்றி பெற்றது. நாதன் மேக்குல்லம் 6 பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 16 ரன் எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.



del.icio.us
Digg