கடன் வாங்கி தருவதாக நூதன மோசடி ரூ.11/2 கோடி சுருட்டிய 2 பெண்கள் கைது கணவர்களும் பிடிபட்டனர்

Font size: Decrease font Enlarge font

சென்னை, ஜுலை 1-

சென்னையில் கடன் வாங்கித் தருவதாக அப்பாவி மக்களிடம் ரூ.11/2 கோடி பண மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள், அவர்களது கணவர்களோடு பிடிபட்டனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் நேற்று முன்தினம் இரவு டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அந்த பெண்கள் போலீசாரிடம் பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தனர்.

டி.பி.சத்திரம் 5-வது தெருவில் வசிக்கும் சீதாலட்சுமியும், முத்தையால்பேட்டையை சேர்ந்த சரளாவும், ராயபுரத்தை சேர்ந்த அனுவும் சேர்ந்து, மத்திய-மாநில அரசுகளின் மானியத்தோடு கடன் வாங்கி தருவதாக கூறி சுமார் 1000 பேரிடம் ரூ.11/2 கோடி கமிஷன் தொகை வாங்கியதாகவும், ஆனால் யாருக்கும் கடன் வாங்கி தராமல் மோசடி செய்துவிட்டதாகவும் புகாரில் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக எழுத்து மூலமாக புகார் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர். இதையொட்டி, செனாய்நகரை சேர்ந்த திலகவதி, ராணி அண்ணாநகரை சேர்ந்த இந்திரா ஆகியோர் உள்பட சுமார் 50 பெண்கள் புகார் மனு கொடுத்தனர். புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

இதற்கிடையே நேற்று பகல் 12 மணியளவில் ஏராளமான பெண்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனரிடமும் புகார் மனு கொடுக்கப்பட்டது. புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

கமிஷன் பணம்

சீதாலட்சுமி, அனு, சரளா ஆகிய 3 பேரும் மானிய உதவித்தொகையோடு கடன் வாங்கி தருவதாக சொல்லி விளம்பரப்படுத்தினார்கள். `பாரத நவயுக டிரஸ்ட்' என்ற பெயரில் அவர்கள் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். அவர்கள் ஏற்கனவே மகளிர் சுயஉதவி குழு மூலம் நிறைய பேருக்கு உதவி செய்து வந்தனர். இதனால் அவர்களை நம்பி கடன் கேட்டு விண்ணப்பித்தோம். ரூ.5 ஆயிரம் கமிஷன் கொடுத்தால் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி தருவதாகவும், ரூ.10 ஆயிரம் பணம் கொடுத்தால் ரூ.1 லட்சம் கடன் வாங்கி தருவோம் என்றும், ரூ.15 ஆயிரம் கொடுத்தால் ரூ.11/2 லட்சம் கடனாக கிடைக்கும் என்றும் கூறினார்கள்.

இதை உண்மை என்று நம்பி ஏராளமான பெண்கள் கமிஷன் பணத்தை வாரி இறைத்தார்கள். கடந்த 8 மாதங்களாக கமிஷன் பணத்தை வாங்கி குவித்த அவர்கள் 3 பேரும் இதுவரை யாருக்கும் கடன் வாங்கி கொடுக்கவில்லை. ஒரு பெண் எம்.பி.யின் பெயரை சொல்லி கடன் தொகை கண்டிப்பாக கிடைக்கும் என்று அவர்கள் கூறி வந்தனர். ஆனால் அவர்கள் மோசடி பேர்வழிகள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு தரவேண்டிய பணத்தை வசூலித்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

 

கதறி அழுதனர்

கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்த பெண்கள் பலர் கதறி அழுதனர். எங்கள் கணவர்களுக்கு தெரியாமல் கடன் கிடைக்கும் ஆசையில் நாங்கள் பணத்தை கொடுத்து ஏமாந்துவிட்டோம் என்று அழுது புலம்பினார்கள்.

வயதான பெண் ஒருவர் தனது மகளின் திருமணத்துக்கு சேர்த்து வைத்திருந்த ரூ.11/2 லட்சம் பணத்தை கொடுத்து ரூ.15 லட்சம் கடனாக கிடைக்கும் என்று ஏமாந்துவிட்டதாக கண்ணீரோடு புகார் சொன்னார். ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் ஏமாந்த சோகத்தை சொல்லி அழுதார்கள். பல பெண்கள் தங்களுடைய பெயரை வெளியில் சொல்ல மறுத்தார்கள்.

வழக்குப்பதிவு

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இணை கமிஷனர் ரவிக்குமார், துணை கமிஷனர் பாண்டியன், உதவி கமிஷனர்கள் ராஜசேகர், அசோக்குமார் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் நரசிம்மவர்மன், சப்-இன்ஸ்பெக்டர் ஞானசவுந்தரி ஆகியோர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

புகார் கூறப்பட்ட சீதாலட்சுமி, அவரது கணவர் சிவசண்முகம், அனு, அவரது கணவர் செந்தில்குமார் மற்றும் சரளா, அவரது தங்கை விமலா, நெருங்கிய நண்பர் ஜெயச்சந்திரன் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ரூ.11 லட்சம் மீட்பு

சீதாலட்சுமி, அவரது கணவர் சிவசண்முகம், அனு, அவரது கணவர் செந்தில்குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.

சீதாலட்சுமியின் வீட்டில் சோதனை நடத்தி, சேலையில் சுருட்டி மடக்கி வைத்திருந்த ரூ.11 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் நகைகளை போலீசார் மீட்டனர். சரளா, விமலா மற்றும் ஜெயச்சந்திரன் ஆகிய 3 பேரும் தலைமறைவாகிவிட்டனர்.

மத்திய குற்றப்பிரிவு

இதற்கிடையில் இந்த வழக்கு விசாரணை நேற்று மாலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. துணை கமிஷனர் விஜயகுமாரி, உதவி கமிஷனர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடனடியாக விசாரணையை மேற்கொண்டனர்.

கைதானவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடந்தது. மோசடி செய்த பணத்தை வைத்து அவர்கள் என்ன செய்தார்கள் என்பது பற்றி தீவிர விசாரணை நடந்தது.

இந்த மோசடிக்கு சரளாதான் மூளையாக செயல்பட்டுள்ளார். அவரை பிடித்தால்தான் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

 

  • email Email to a friend
  • print Print version
Advertisement