முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க மறுப்பதால் கோஷம்: அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றம்
சென்னை, ஜுலை 1-
சட்டசபையில் முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க எடுத்துக் கொள்ளாததால் கோஷம் போட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
அ.தி.மு.க.வினர் கோஷம்
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து, ஒரு முக்கிய பிரச்சினை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம். அதனை விவாதிக்க எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக எழுந்து வாய்ப்பு கேட்டனர். அதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன், ``இன்று கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள பிரிகால் தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பது குறித்த பிரச்சினை எடுத்துக் கொள்ளப்படும்'' என்றார்.
இதனால் அ.தி.மு.க. உறுப்பினர்கள் தாங்கள் கொடுத்துள்ள பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர். சபாநாயகர் அவர்களை அமைதியாக இருக்கும்படி எச்சரித்தும் அவர்கள் தொடர்ந்து கோஷம் போட்டபடி இருந்தனர்.
வெளியேற்றினார்கள்
அப்போது முதல்-அமைச்சர் குறுக்கிட்டு, ``அவை மரபுகளை மீறி அவைக்குள் கோஷம் போடுபவர்களை வெளியேற்ற வேண்டும் என்று பேரவைத் தலைவரை கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.
இதனை ஏற்று சபாநாயகர் ஆவுடையப்பன், சபை காவலர்களை அவைக்குள் கோஷம் போடுபவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். இதனால் காவலர்கள் சபைக்குள் வந்து அ.தி.மு.க.வினரை வெளியேற்றினார்கள். அப்போதும் அவர்கள் கோஷம் போட்டுக் கொண்டே சென்றனர்.
ஆனால் எஸ்.வி.சேகர் மட்டும் அவரது இருக்கையில் அமர்ந்திருந்தார்.
ம.தி.மு.க. வெளிநடப்பு
அ.தி.மு.க.வினருக்கு ஆதரவாக ம.தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
டி.சுதர்சனம் (காங்கிரஸ்):- மக்கள் பணியாற்றும் இவர்கள் தினம் தினம் வந்து இப்படி அநாகரிகமான முறையில் கூச்சல் போடுவதை எப்படி ஜனநாயகம் என்று ஏற்க முடியும். காப்பாற்று, காப்பாற்று என்று சொன்னால் யாரை காப்பாற்றுவது, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தையா? செங்கோட்டையனையா? அவர்களுக்கு என்ன ஆபத்து வந்திருக்கிறது? என்று அறிய விரும்புகிறேன். சபாநாயகர் அலுவல் ஆய்வுக்குழுவை நடத்தி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்.
(அப்போது மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு, இந்திய கம்ïனிஸ்டு உறுப்பினர்கள் எழுந்து ஏதோ கூறினார்கள்.)
இடதுசாரி நண்பர்கள் இப்படி பேசிப்பேசி நேரத்தை வீணடிக்கிறார்கள். இதுபோன்று அவைக்குள் கோஷம் போடும் நிலை இனிமேலும் நடக்காமல் சபை கண்ணியமாக நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேச அனுமதித்திருந்தால்
ஜி.கே.மணி (பா.ம.க.) ஒரு கருத்தை கூறினார்.
சபாநாயகர்:- நீங்கள் கொடுத்த நோட்டீஸ் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. அந்த தகவலும் உங்களுக்கு தரப்பட்டு விட்டது. அதனை நீங்கள் மீண்டும் எழுப்ப முடியாது. ஜி.கே.மணி கூறியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது.
சிவபுண்ணியம் (இந்திய கம்ïனிஸ்டு):- கேள்வி நேரம் முடிந்தபின் கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானங்களை எடுத்துக் கொள்வது வழக்கம். நாங்கள் நிறைய கொடுத்திருக்கிறோம், அதனை எடுப்பது, எடுக்காமல் இருப்பது உங்கள் உரிமை. அ.தி.மு.க.வினர் கூறும் பிரச்சினையை எடுத்துக் கூற வாய்ப்பளித்து, பின்னர் அது எடுக்கப்படுமா? எடுக்கப்படாதா? என்று கூறியிருந்தால் பிரச்சினை வராது.
சபாநாயகர்:- அவர்கள் என்ன என்றே கூறாமல் கோஷம் போட்டால் எப்படி புரிந்து கொள்ள முடியும்.
கம்ïனிஸ்டு எதிர்ப்பு
பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு):- அந்த தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கொடுக்கவில்லை.
சபாநாயகர்:- அவர்கள் எதற்காக கோஷம் போட்டார்கள் என்றே தெரியாதே.
பாலபாரதி:- காங்கிரசுக்கு தெரியாத ஜனநாயகமே இல்லை. சபை நேரத்தை சுதர்சனம் திசைதிருப்புவது சரியல்ல. எதிர்க்கட்சிக்கு கருத்து சொல்லவும், வெளிநடப்பு செய்யவும் உரிமை இருக்கிறது. காங்கிரசோடு சேர்ந்து நாங்கள் கடந்த காலங்களில் அதிக முறை வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
அமைச்சர் பொன்முடி:- அப்போது வெளியேற்றப்படவில்லையா? தூக்கிக் கொண்டு போயிருக்கிறார்கள். உங்களையும் சேர்த்து தூக்கி போட்டிருக்கிறார்கள். கோஷம் போட்டால் வெளியேற்றுவது மரபு, அதைத்தான் சபாநாயகர் செய்திருக்கிறார்.
காங்கிரஸ்-கம்ïனிஸ்டு மோதல்
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):- காங்கிரஸ் கட்சிக்கு என்ன உரிமை இருக்கிறது என்று பாலபாரதி கேட்டார். அதற்காக வருத்தப்படுகிறேன். உரிமைகளுக்காகவே கட்சி நடத்துகிறவர்கள் அவர்கள். அவை கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்ற உரிமை 234 உறுப்பினர்களுக்கும் இருக்கிறது. நேரமில்லா நேரத்தில் (சீரோ அவர்) ஏற்பதும் நிராகரிப்பதும் இந்த அவையில் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. எழுந்து நின்றதற்கே, எந்த விதியின் கீழ் எழுந்து நிற்கிறீர்கள் என்று என்னை கேட்டதும், தலைவிதி என்று கூறியிருக்கிறேன். வேட்டி கட்டி வந்தால் ஆபத்து என்று கூறி நான், பரிதி இளம்வழுதி போன்றவர்கள் `பேண்ட்' அணிந்து வந்தோம். அ.தி.மு.க.வினர் நாடகம் போல எழுதி வைத்து, அவைக்கு வெளியே ஒத்திகை நடத்தி உள்ளே வந்து கோஷம் போடுகிறார்கள். இந்த அவையில் நடப்பதை கண்டிக்கும் உரிமை எங்களுக்கு உண்டு.
அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க சிவபுண்ணியமும், பா.ம.க. உறுப்பினர்களும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். நான் அவருக்கு அனுமதி தந்திருக்கிறேன் என்று சபாநாயகர் கூறினார். இதனால் காங்கிரஸ் உறுப்பினர்களும், இந்திய கம்ïனிஸ்டு உறுப்பினர்களும் ஒருவரை எதிர்த்து ஒருவர் குரல் கொடுத்தனர்.
தவறென்றாலும் வேறுவழியில்லை
அமைச்சர் அன்பழகன்:- எந்த ஒரு பிரச்சினை என்றாலும் அதுகுறித்து சபாநாயகர் அந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்கிறாரோ அது தான். அது சில நேரம் தவறாக கூட இருக்கலாம். தவறாக இருந்தாலும் அந்த நேரத்தில் அதைத்தவிர வேறு வழியில்லை. அவைத் தலைவர் அனுமதித்ததை மட்டுமே பேசலாம். ஒருவரின் பேச்சை எப்போது நிறுத்துவது என்பதில் பிரச்சினை வரும். பீட்டர் ஒரு பேச்சாளர் என்பதால் அவர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார். தினந்தோறும் பிரச்சினை செய்தால் ஒரு கட்சியைக் கூட ஒரு மாத காலம் அனுமதிக்காமல் இருக்க வேண்டும் என்று தீர்மானம் கூட போடலாம். வேண்டுமென்றே அரசியலுக்காக இந்த சபை நேரத்தை எடுத்துக் கொண்டால் இதை தடுக்க சபாநாயகருக்கு உரிமை உண்டு, அவை முன்னவருக்கும் உரிமை உண்டு.
பா.ம.க. வெளிநடப்பு
ஜி.கே.மணி:- மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு அதை விவாதித்தால் தான் ஒரு தீர்வு ஏற்படும்.
அமைச்சர் அன்பழகன்:- நீங்கள் கொடுக்கப்பட்டது மறுக்கப்பட்டால் அதை அனுமதி கேட்டு மீண்டும் எழுதித்தர வேண்டுமே தவிர சபை நேரத்தை வீணடிக்க கூடாது.
ஜி.கே.மணி:- நான் ஒரே பிரச்சினையை மட்டும் கூறவில்லை, நிறைய பிரச்சினைகள் பற்றி கூறியிருக்கிறோம்.
சபாநாயகர்:- எனக்கு எது முக்கியம் என்று தெரிகிறதோ அதைத்தான் எடுப்பேன்.
இதனால் வெளிநடப்பு செய்வதாக கூறி பா.ம.க.வினரும் வெளிநடப்பு செய்தனர்.
முதல்-அமைச்சர் கருணாநிதி:- கட்சியின் கருத்தை இங்கே வந்து எதிரொலிக்கிறார்கள்.
அதோடு இந்த பிரச்சினை முடிந்தது.
இந்திய கம்ïனிஸ்டு வெளிநடப்பு
இந்த பிரச்சினை முடிந்த சிறிது நேரத்தில் இந்திய கம்ïனிஸ்டு உறுப்பினர் சிவபுண்ணியம், வேறொரு பிரச்சினை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருக்கிறோம். முக்கியத்துவம் கருதி இதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். அதற்கு சபாநாயகர் இந்த பிரச்சினை குறித்து அ.தி.மு.க., பா.ம.க., சி.பி.எம். ஆகிய கட்சிகளும் கொடுத்திருக்கின்றன. நாளை இது எடுக்கப்படும் என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்ïனிஸ்டு கட்சி வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு அவர்கள் வெளியேறினார்கள்.



del.icio.us
Digg