தற்காலிக டைப்பிஸ்ட் தேர்வு நடத்த தடை

Font size: Decrease font Enlarge font

 

சென்னை : தற்காலிக டைப்பிஸ்ட், சுருக்கெழுத்தர்களுக்காக சிறப்பு தேர்வு நடத்துவதற்கு விண்ணப்பங்களை வரவேற்று பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை வடபழனியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் தாக்கல் செய்த மனு: நான் தற்காலிக இளநிலை உதவியாளராக, 4,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறேன்.


2003ம் ஆண்டு அரசு ஊழியர்கள் போராட்டத்தின் போது, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப் பட்டனர். பின், தற்காலிக ஊழியர்களை நிரந்தரப் படுத்துவதற்காக, சிறப்பு போட்டித் தேர்வு நடந்தது. 4,103 பேரை தேர்வு செய்வதற்காக இத்தேர்வு நடந்தது. இதில் 10 ஆயிரத்து 940 பேர் கலந்து கொண்டனர். 90 மதிப்பெண்கள் பெற்ற அனைவரையும் பணிக்கு தேர்ந்தெடுக்கக் கோரி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், 2006ம் ஆண்டு நியமிக்கப்பட்ட தற்காலிக டைப்பிஸ்ட், சுருக்கெழுத்தர்களுக்காக சிறப்புத் தேர்வை நடத்துமாறு டி.என்.பி. எஸ்.சி.,க்கு அரசு உத்தரவிட்டது. இவர்கள் அனைவரும் ஒரு ஆண்டுக்கு என தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்கள். இதையடுத்து, சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவழைத்து, கடந்த 18ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. எனவே, குரூப்-4 பணியிடங்களுக்கு எங்களை பயன்படுத்தாமல், அரசு தன் நிலையில் இருந்து மாறுவது தவறு. கடந்த 18ம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணை தொடர்பான நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும். தகுந்த பணியில் என்னை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


இதை நீதிபதி கே.என்.பாஷா விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல்கள் சோழன் ஆஜரானார். டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பாணை தொடர்பான நடவடிக்கைக்கு நீதிபதி பாஷா இடைக்காலத் தடை விதித்தார். விசாரணையை வரும் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement