வாகனம் ஓட்ட தகுதியில்லாதவர் டிரைவர் பணி கேட்க உரிமையில்லை : சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
சென்னை : "வாகனம் ஓட்ட தகுதியில்லாதவர், டிரைவர் பணியில் நியமிக்கக் கோருவதற்கு உரிமையில்லை' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். 9ம் வகுப்பு படித்துள்ளார். லாரி ஓட்டி வந்தார். கனரக வாகனம் ஓட்டும் உரிமம் பெற்றார். மாநில போக்குவரத்து கழக டிரைவர் வேலைக்கு இவரது பெயரை கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சிபாரிசு செய்தது. கோவை நகர பஸ் டிரைவராக நியமிக்கப்பட்டார்.
கோவையில் உக்கடம் - கோட்டைபாளையம் வழித்தடத்தில் பாலசுப்ரமணியம் பஸ் ஓட்டிக் கொண்டிருந்த போது, சாலையோரம் இருந்த பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இச்சம்பவத்தில், பயணிகள் ஏழு பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். அஜாக்கிரதையாக ஓட்டியதாலும், பஸ்சுக்கு சேதம் விளைவித்ததாலும் பாலசுப்ரமணியம், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் அளித்த விளக்கம் சரியில்லை, குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டுள்ளது எனக் கூறி, பணியில் இருந்து நீக்கி போக்குவரத்து கழக நிர்வாகம் உத்தரவிட்டது. கடந்த 96ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டார். விசாரணையின் போது, இவருக்கு கனரக வாகனங்களை ஓட்டும் தகுதியும், திறமையும் இல்லை என தெரிய வந்தது. பணிநீக்கத்தை எதிர்த்து கோவையில் உள்ள தொழிலாளர் கோர்ட்டில் பாலசுப்ரமணியம் வழக்கு தொடுத்தார். இவரை பணிநீக்கம் செய்தது சரிதான் என தொழிலாளர் கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பாலசுப்ரமணியம் மனு தாக்கல் செய்தார். மீண்டும் பணியில் அமர்த்தக் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு: பொதுமக்கள் பயணிக்கும் பஸ்களை ஓட்டும் டிரைவர்கள் முழுமையாக பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பஸ்களை ஓட்டும் தகுதி இருக்க வேண்டும். அப்போது தான் விபத்துக்கள் தவிர்க்கப்படும். புள்ளி விவரங்களை பார்க்கும் போது, தமிழகத்தில் அதிக விபத்துக்கள் நடப்பது தெரிய வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 60 ஆயிரத்து 407 விபத்துக்கள் நடந்துள்ளன. 12 ஆயிரத்து 784 பேர் உயிர் இழந்துள்ளனர். இத்தகைய விபத்துக்களை தவிர்க்க, பஸ்களை ஓட்டும் டிரைவர்களுக்கு அதற்கான தகுதி இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும்.
மனுதாரரைப் பொறுத்தவரை, போக்குவரத்து கழகம் அவரது தகுதியை சரியாக தீர்மானித்து உள்ளது. பயணிகள், பாதசாரிகள், இதர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கான பாதுகாப்பை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். கனரக வாகனத்தை ஓட்டுபவரின் தகுதியை சரிபார்க்க வேண்டிய கடமை போக்குவரத்து கழக நிர்வாகத்துக்கு உள்ளது. கனரக வாகனத்தை ஓட்டும் தகுதியே இல்லாத நபர், தன்னை மீண்டும் டிரைவராக நியமிக்க வேண்டும் என உரிமை கோர முடியாது. பணியில் இருந்து நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை தொழிலாளர் கோர்ட் உறுதி செய்துள்ளது. இந்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை. மனுதாரர் பஸ்சை ஓட்டுவதற்கு தகுதி இல்லை என்பதால், அவருக்கு வேறு பணி வழங்கலாம். இதுகுறித்து, போக்குவரத்து கழக நிர்வாகத்துக்கு மனுதாரர் மனு அனுப்பினால், அதை பரிசீலித்து தகுதி அடிப்படையில் நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்கலாம். இவ்வாறு நீதிபதி பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.



del.icio.us
Digg