சட்டக் கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் தேர்வு எழுத சென்னை ஐகோர்ட் அனுமதி

Font size: Decrease font Enlarge font

 

சென்னை : வருகைப்பதிவு குறைவுக்காக அனுமதி மறுக்கப்பட்ட சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர், இன்று துவங்கும் தேர்வை எழுத சென்னை ஐகோர்ட் அனுமதியளித்துள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த பஷீர் முகைதீன் என்பவர் தாக்கல் செய்த மனு: திருச்சி சட்டக் கல்லூரியில் ஐந்தாண்டு பி.எல்., படிப்பு படித்து வருகிறேன். இறுதி ஆண்டு தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருக்கும் போது, நான் மீண்டும் இறுதி செமஸ்டர் படிக்க வேண்டுமென கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்வு துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன், அறிவிப்பு பலகையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.


சட்டக் கல்லூரி முதல்வரை சந்திக்க முயன்ற போது, என்னை அனுமதிக்கவில்லை. எனக்கு வருகைப் பதிவு குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், நான் பெரும்பாலும் வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளேன். ஒரு செமஸ்டருக்கு 90 நாட்கள் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன. இலங்கைப் பிரச்னைக்காகவும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. மார்ச் மாதம் 23ம் தேதி தான் கல்லூரிகள் திறக்கப்பட்டன. எனவே, 10வது செமஸ்டரில் 64 நாட்கள் தான் கல்லூரி இயங்கியது. 25 நாட்கள் பிராக்டிகல் வகுப்பில் கலந்து கொண்டுள்ளேன். எனவே, வருகைப் பதிவு குறைவு என்பதே இருக்காது. பத்தாவது செமஸ்டர் தேர்வு 2ம் தேதி (இன்று) துவங்குகிறது. என்னை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.


மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.பிரபாகரன் வாதாடினார். இதுபோன்று சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆறு பேரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். இன்று துவங்கும் தேர்வை எழுத மாணவர்களுக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் அனுமதியளித்தார்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement