வாலிபரை கொன்று பணம் கொள்ளை செய்தவருக்கு ஆயுள்: ஐகோர்ட் உறுதி
மதுரை : "கோவில்பட்டி அருகே மசாலா கம்பெனி ஊழியரை கொடூரமாக கொலை செய்து பணத்தை கொள்ளையடித்தவருக்கு செஷன்ஸ் கோர்ட் விதித்த ஆயுளை,' மதுரை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. கோவில்பட்டி சடையம்பட்டியை சேர்ந்த சுரேஷ்குமார் மசாலா கம்பெனியில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று சக ஊழியர்களுடன் ஒவ்வொரு ஊராக சென்று கம்பெனி தயாரிப்புகளை விற்று விட்டு பணத்துடன் கழுகுமலை -கோவில்பட்டி ரோட்டில் வேனில் சென்றார். கம்பெனியில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் வெங்கடேஷ் அவர்களிடம், ""தனது கார் பழுதடைந்ததாக கூறி முன்னால் வேனை ஓட்டும்படியும், பின்னால் காரை இழுத்து கட்டி வருவதாகவும்,'' கூறினார். அதன்படி காரை கட்டி இழுத்து சென்ற போது வெங்கடேஷ் திடீரென அரிவாளால் சுரேஷ்குமாரை வெட்டி அவரிடமிருந்த 30 ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டார். தடுக்க முயன்ற அப்பாஸ் அலியையும் வெட்டி விட்டு ஓடிவிட்டார். சுரேஷ்குமார் இறந்தார். கழுகுமலை போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர். அவருக்கு தூத்துக்குடி செஷன்ஸ் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து வெங்கடேஷ் மேல் முறையீடு மனு செய்தார். அவரை விடுவிக்க அரசு வக்கீல் ஐசக் மனுவேல் ஆட்சேபம் தெரிவித்தார். மேல்முறையீடு மனுவை நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஆர்.மாலா கொண்ட பெஞ்ச் தள்ளுபடி செய்தது.



del.icio.us
Digg