தேசியக் கொடியை எரிக்க முயன்ற வழக்கு : நிபந்தனையை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி

Font size: Decrease font Enlarge font

 

சென்னை : "வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்' என்ற உத்தரவில் மாற்றம் செய்யக் கோரிய மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. அடிப்படை கடமைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அமல்படுத்தவும் சிறப்பான வழிமுறைகளை உருவாக்க ஒரு குழுவை தலைமைச் செயலர் அமைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.


கோவை கலெக்டர் அலுவலகம் முன், இந்திய தேசியக் கொடியை எரிக்க முயன்றதாக தமிழரசன் என்பவர் உட்பட எட்டு பேர், கடந்த மாதம் 25ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்களின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ரகுபதி, "தங்கள் வீடுகளின் முன் கொடிக்கம்பம் நட்டு, அதில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். ஒரு வாரத்துக்கு இதை பின்பற்ற வேண்டும்' என நிபந்தனை விதித்தார்.


நிபந்தனையை மாற்றக் கோரி தமிழரசன், பாரதி, சங்கரவடிவேலு தாக்கல் செய்த மனு: வீட்டின் முன் தேசியக் கொடியை ஒரு வாரத்துக்கு ஏற்ற வேண்டும் என்ற நிபந்தனையை எங்களால் ஏற்க முடியவில்லை. எங்கள் மீது சில குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இன்னும் புலன் விசாரணையில் தான் உள்ளது. குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும். ஜாமீன் நிபந்தனை விதிப்பது என்பது, புலனாய்வுக்கு உகந்ததாக இருக்க வேண்டும்; தண்டிக்கும் வகையில் இருக்கக்கூடாது. விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்ற மாட்டோம். எனவே, கோர்ட் விதித்த நிபந்தனைகளில் மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.


மனுவை விசாரித்த நீதிபதி ரகுபதி பிறப்பித்த உத்தரவு: அடிப்படை உரிமை ஒவ்வொன்றுக்கும் இணையாக கடமை என்று உள்ளது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 51ஏ, இதைப் பற்றி குறிப்பிடுகிறது. தேசியக் கொடி, தேசிய கீதத்துக்கு மரியாதை செய்ய வேண்டும்; நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும் என, பல்வேறு அம்சங்கள் இந்தப் பிரிவில் இடம் பெற்றுள்ளன. அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் ஒரு குடிமகனின் தலையாய கடமை என்னவென்றால், அரசியலமைப்புச் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும். தேசியக் கொடி, தேசிய கீதம் ஆகியவற்றுக்கு மரியாதை செய்ய வேண்டும். அடிப்படை உரிமைகளை ஒருவர் நிறைவேற்றும் போது, சமூகத்துக்கான அடிப்படை கடமைகளை புறக்கணித்து விடக்கூடாது. எனவே, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 51ஏ குறிப்பிட்டுள்ள கடமைகளை, நாட்டின் குடிமகன் நிறைவேற்ற வேண்டும். அந்தக் கடமைகளைப் பற்றி அவன் பொருட்படுத்தவில்லை என்றால், உரிமைகள் பெறவும் அவனுக்குத் தகுதியில்லை.


இந்த வழக்கைப் பொறுத்தவரை, தேசியக் கொடியை மனுதாரர்கள் எரிக்கவில்லை. ஆனால், அதை எரிப்பதற்காக கொண்டு செல்லும் போது, அவர்களின் நோக்கம் அதை எரிப்பதற்கு தான் என்பது தெளிவாகிறது. சட்டத்துக்கு உட்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதை யாரும் தடுக்கவில்லை. அதே நேரத்தில், தேசிய சின்னங்களை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை அவமரியாதை செய்யும் விதத்தில் போராட்டங்களை நடத்துவதை அனுமதிக்க முடியாது. கோவையில் ராணுவ வாகனங்களின் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அந்த வாகனங்களில் வெடிப்பொருட்கள் இருந்து அது வெடித்திருந்தால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் பலியாகியிருப்பர். கட்டுப்பாடற்ற சுதந்திரம், உரிமை என்பது வெறி பிடித்த மிருகம் போலாகும். அதனால் தான், ஒவ்வொரு உரிமைக்கும் இணையாக கட்டுப்பாடுகள், கடமை என அளிக்கப்பட்டுள்ளது.


தேசியக் கொடியை எரிக்கும் நோக்கில் தான், மனுதாரர்கள் அதை கொண்டு சென்றுள்ளனர். கோர்ட் உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த வழக்கில் ஒரு வாரத்தில் இறுதி அறிக்கையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும். மூன்று மாதங்களில், வழக்கு விசாரணையை கீழ்கோர்ட் முடிக்க வேண்டும். அரசியலமைப்பு சாசனப் பிரிவு 51ஏல் குறிப்பிட்டுள்ள கடமைகளை அமல்படுத்தவும், அவற்றைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒரு வழிமுறையை உருவாக்க, சட்டசபை, நிர்வாகம், நீதித் துறையைச் சேர்ந்த முக்கியமானவர்கள் அடங்கிய குழுவை தலைமைச் செயலர் அமைக்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி ரகுபதி உத்தரவிட்டுள்ளார்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement