திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம், 14 ஆண்டிற்குப்பின் இன்று காலை நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம், 14 ஆண்டிற்குப்பின் இன்று காலை 10.30 க்கு மேல் 11.15 மணிக்குள் நடக்கிறது. அதற்கான யாகசாலை பூஜை, கடந்த 26ம் தேதி துவங்கி, தினமும் காலை,மாலையில் நடந்து வருகிறது.
கும்பாபிஷேகத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், கோவில் வளாகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் கோவிலின் கீழே இருந்து கும்பாபிஷேகத்தை காணும் வகையில், எல்.சி.டி., "டிவி'க்கள் வைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தையொட்டி, கோவில் ராஜகோபுரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. நகரின் பல இடங்களில் மின் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில், நெல்லை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நெல்லையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வி.ஐ.பி.,க்களின் வாகனங்களைத் தவிர, மற்றவை நகருக்கு வெளியே நிறுத்தப்படுகின்றன. நெல்லை டி.ஐ.ஜி., கண்ணப்பன் தலைமையில் மூன்று எஸ்.பி.,க்கள், ஏராளமான போலீஸ் அதிகாரிகள், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தரிசன நேரம் இன்று மாற்றம்: "கும்பாபிஷேக பூஜைகளையொட்டி இன்று காலை எட்டு மணி முதல் மதியம் இரண்டு மணி வரை, திருச்செந்தூர் கோயிலுக்குள் பக்தர்கள் தரிசனத் திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 10.30 க்கு மேல் 11.15 மணிக்குள் நடக்கிறது. கோயில் நடை அதிகாலை இரண்டு மணிக்கு திறக்கப்படுகிறது. காலை எட்டு மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.அதன்பின் கும்பாபிஷேக பூஜைகள் முடிந்து மதியம் இரண்டு மணிக்குப் பின்னரே, பக்தர்கள் மீண்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர், என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.



del.icio.us
Digg