ராஜீவ்காந்தியின் பெயர் சூட்டப்பட்டது மும்பையில் 51/2 கி.மீ நீள கடல்வழி பாலம் சோனியாகாந்தி திறந்து வைத்தார்
மும்பை, ஜுலை.1-
மும்பையில் பாந்திரா-ஒர்லி இடையேயான கடல் வழி பாலத்தை நேற்று சோனியாகாந்தி திறந்துவைத்தார்.
மும்பை நகரின் மேலும் ஒரு அடையாளச் சின்னமாக உருவாகி இருக்கும் இந்த பாலத்துக்கு ராஜீவ்காந்தியின் பெயர் சூட்டப்பட்டது.
பிரமாண்ட கடல் பாலம்
மும்பை நகரின் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக மும்பை நகரின் தெற்கு பகுதியையும், மேற்கு புறநகர் பகுதிகளையும் இணைக்கும் வகையில் பாந்திரா, ஒர்லி இடையே அரபிக் கடல் மீது பிரமாண்டமான பாலம் கட்டப்பட்டது. 5.6 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த கடல் வழிப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கியது.
பாலம், இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் 4 வழிச்சாலைகளை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதில் ஒரு பிரிவில் அண்மையில் பணிகள் முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தயாரானது.
மும்பை மாநகரின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள இந்தப் பாலத்தின் மூலம் பாந்திராவில் இருந்து 6 முதல் 8 நிமிடங்களில் ஒர்லிக்கு சென்று விடலாம். தற்போது இதே தூரத்தை கடக்க 60 முதல் 90 நிமிடங்கள் ஆகிறது.
சோனியாகாந்தி
ரூ.1,600 கோடி செலவில் உருவாகியுள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க பாலத்தின் திறப்பு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. விழாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி கலந்து கொண்டு, புதிய பாலத்தை திறந்துவைத்தார்.
விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய மந்திரியுமான சரத்பவார் பேசுகையில், பாந்திரா-ஒர்லி கடல்வழிப் பாலத்துக்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ராஜீவ்காந்தி பெயர்
உடனே இந்த கோரிக்கையை மேடையில் இருந்த முதல்-மந்திரி அசோக் சவான் ஏற்றுக்கொண்டார். பொருத்தமான முடிவு எடுத்ததற்காக சரத்பவாருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறிய அவர், பாந்திரா-ஒர்லி கடல் வழிப்பாலம், `ராஜீவ்காந்தி சேது' என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து கடல் பாலத்துக்கு தனது கணவரின் பெயரை சூட்டியதற்காக அசோக் சவானுக்கும், சரத்பவாருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நன்றி தெரிவித்துக்கொண்டார்.



del.icio.us
Digg