மேற்கு கடற்கரை வழியே, தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் ஆபத்து ப. சிதம்பரம் தகவல்
ஐதராபாத், ஜுலை.2-
"மேற்கு கடற்கரை வழியே, இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் ஆபத்து இருக்கிறது'' என்று, மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
மும்பை தாக்குதல்
கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவில் பல்வேறு இடங்களில் தேசிய பாதுகாப்பு படை மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த படைக்கு 53 சதவீதம் பேர் ராணுவத்தில் இருந்தும், 47 சதவீதம் பேர் துணை ராணுவத்தில் இருந்தும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது.
முதலாவதாக மும்பையில் இந்த மையம் தொடங்கி வைக்கப்பட்டது. நேற்று சென்னையிலும், ஐதராபாத்திலும் தொடங்கி வைக்கப்பட்டது.
ஐதராபாத்தில்
ஐதராபாத்தில் நடந்த விழாவில், மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு இந்த மையத்தின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தார். மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலின் போது சிறப்பாக செயல்பட்ட ராணுவ தளபதி சந்தீப் சிங்கிடம், 3-வது மையத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவுக்கான பட்டயத்தை, ப.சிதம்பரம் வழங்கினார்.
விழா முடிந்ததும். ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேற்கு கடற்கரை வழியே
இந்தியாவுக்குள், மேற்கு கடற்கரை வழியே தீவிரவாதிகள் ஊடுருவும் ஆபத்து இருப்பதாக, மத்திய அரசுக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்து இருக்கிறது. இதனால் இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம். இந்த தாக்குதல் உடனடியாக நடக்கும் என்று கூற முடியாது. தீவிரவாதிகள் எந்த இடத்தில் தாக்குதலை நடத்துவார்கள்? என்றும் தெரியாது. என்றாலும், நாம் முன் எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும்.
மத்திய அரசுக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, குஜராத், மராட்டியம், கோவா போன்ற மேற்கு கடற்கரை மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறோம். கடற்கரை பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தி, மாநில அரசுகள் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
தீவிரவாதிகளின் புகலிடமா?
ஐதராபாத் நகரத்தை தீவிரவாதிகளின் புகலிடம் என்று கூற முடியாது. இந்தியாவில் உள்ள எந்த நகரையும் இது போல குறிப்பிட்டு கூற முடியாது. என்றாலும், எல்லா இடங்களிலும் உஷாராக செயல்பட வேண்டியது அவசியம்.
பெங்களூரில் ராணுவ வீரர்களை கொண்ட தேசிய பாதுகாப்பு மையமும், ஜோத்ïர், கவுகாத்தி ஆகிய நகரங்களில் துணை ராணுவத்தை கொண்ட மையமும் விரைவில் அமைக்கப்படும்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.



del.icio.us
Digg