பாந்திரா-ஒர்லி இடையேயான கடல்வழி மேம்பாலத்தை வடிவமைத்தவர் தமிழர்

Font size: Decrease font Enlarge font

மும்பை, ஜுலை.2-

பாந்திரா-ஒர்லி கடல் வழி மேம்பாலத்தை தமிழகத்தை சேர்ந்த என்ஜினீயரான சேஷாத்ரி ஸ்ரீனிவாசன் வடிவமைத்து உள்ளது தெரியவந்துள்ளது.

பாலத்தை வடிவமைத்தவர் தமிழர்

மும்பையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாந்திரா-ஒர்லி இடையே ரூ.1600 கோடி செலவில் கடல்வழியாக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மும்பையின் பெருமைக்குரிய அடையாளச் சின்னங்களில் ஒன்றாக உருவாகி இருக்கும் இந்த பாலத்தை ஒரு தமிழர்தான் வடிவமைத்து இருக்கிறார்.

இதன் விவரம் வருமாறு:-

பாந்திரா- ஒர்லி கடல் பாலத்தை `டார் அல் ஹன்ட்சா' என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் லண்டனில் உள்ளது. உலகம் முழுவதும் இந்த நிறுவனத்துக்கு கிளைகள் உள்ளன.

20-க்கும் மேற்பட்ட இயக்குனர்களை கொண்ட இந்நிறுவனத்துக்கு உலக அளவில் 4 ஆலோசகர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் சேஷாத்ரி ஸ்ரீநிவாசன். இவர் அந்த நிறுவனத்தின் தலைமை என்ஜினீயராகவும் பணிபுரிகிறார். இவர்தான் பாந்திரா-ஒர்லி கடல்வழி மேம்பாலத்தை வடிவமைத்தவர்.

சென்னையில் படித்தவர்

சென்னையை சேர்ந்த இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரில்தான். இவருடன் உடன் பிறந்தவர்கள் 1 சகோதரர், 2 சகோதரிகள் என மொத்தம் 4 பேர். இவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.

சேஷாத்ரி ஸ்ரீநிவாசன், கடந்த 1958-ம் ஆண்டு சென்னையில் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவருடைய மனைவி சுகந்தி லண்டனில் உள்ள பிரபலமான மருத்துவமனை ஒன்றில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

பேட்டி

பாந்திரா-ஒர்லி மேம்பாலத்தை வடிவமைத்தது குறித்து என்ஜினீயர் சேஷாத்ரி ஸ்ரீநிவாசன் கூறியதாவது:-

நான் `டார் அல் ஹன்ட்சா' வடிவமைப்பு நிறுவனத்தில் கடந்த 50 வருடமாக வேலை செய்து வருகிறேன். சென்னை அலுவலகத்தை நிர்வகிக்கும் தலைவராக நான் உள்ளேன். சவுதி அரேபியா, ரியாத், உள்ளிட்ட நாடுகளில் 90 சதவீத பாலங்கள், விளையாட்டு மைதானங்கள் எங்களுடைய வடிவமைப்புகள் தான்.

புதிய வடிவமைப்பு

பாந்திரா-ஒர்லி கடல் வழி மேம்பாலத்திற்கான பணிகளை முதலில் அமெரிக்க நிறுவனம் செய்து வந்தது. பாலத்தை வடிவமைத்து கட்டுமானம் செய்வதில் பிரச்சினைகள் இருந்ததால் அந்த நிறுவனம் விலகிக் கொண்டது. மேலும் கடந்த 2003-ம் ஆண்டு பாலத்துக்கான ஆலோசனை மற்றும் வடிவமைப்பு பணியை எங்களிடம் ஒப்படைத்தார்கள். முதலில் இந்த கடல்வழி மேம்பாலத்தை கட்டுவதற்கு அமெரிக்க நிறுவனம் வேறுவிதமான வடிவமைப்பு செய்திருந்தது. நான் அதை மாற்றி புதியதாக வடிவமைப்புகளுடன் வரைபடம் தயாரித்தேன். பின்னர் கம்ப்ïட்டர் மூலம் வரைந்து பார்த்தபோது, மிகவும் அழகாக இருந்தது.

பெருமை அடைகிறேன்

உடனே புதிய வடிவமைப்பிலேயே மேம்பாலத்தை கட்டுவதற்கு திட்டமிட்டோம். இந்த மேம்பாலம் நாட்டின் இதயம் போன்றது. தமிழனான நான் இந்த பாலத்தை வடிவமைத்ததில் பெருமை அடைகிறேன்.

இவ்வாறு பொறியாளர் சேஷாத்ரி ஸ்ரீநிவாசன் கூறினார்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement