வங்கி மேலாளரை காங்கிரஸ் எம்.பி. கன்னத்தில் அறைந்த விவகாரம் விசாரணை நடத்த சோனியா உத்தரவு

Font size: Decrease font Enlarge font


ஐதராபாத், ஜுலை.2-

வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் எம்.பி. விவகாரம் குறித்து விசாரணை நடத்தும்படி சோனியா உத்தரவிட்டு இருக்கிறார்.

வாக்குவாதம்

ஆந்திர மாநிலம், நாகர் கர்நூல் தொகுதியில் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வருபவர், ஜெகன்நாத். `தலித்' இனத்தை சேர்ந்தவர். மகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள `கிராமின் விகாஸ்' வங்கியின் மேலாளராக பணிபுரிந்து வருபவர், ரவீந்தர் ரெட்டி.

அந்த வங்கியின் எல்லைக்கு உட்பட்ட உப்புனுந்தலா பகுதியை சேர்ந்த `தலித்' இன மக்களுக்கு கடந்த 6 மாதங்களாக கடன் உதவி வழங்கப்படவில்லை என்று, ஜெகன்நாத் எம்.பி. குற்றம் சாட்டினார். மண்டல அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், இந்த பிரச்சினை தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

`பளார்' அÛ
இதனால் ஆத்திரம் அடைந்த எம்.பி. கூட்டம் முடிந்தபிறகு வங்கிக்கு சென்று மீண்டும் மேலாளர் ரவீந்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், மேலாளர் ரவீந்தர் ரெட்டியின் கன்னத்தில் ஜெகன்நாத் எம்.பி. `பளார்' என்று அறைந்துவிட்டார். அருகில் இருந்தவர்கள் இருவரையும் விலக்கி விட்டனர்.

எம்.பி.யின் புகாரின் பேரில், வங்கி மேலாளர் மீது `தலித்' இனத்துக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அதேபோல், மேலாளர் புகாரின் பேரில் எம்.பி. மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீரப்பமொய்லி கண்டனம்

மேலாளரை தாக்கிய சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தி, ஆந்திர மாநில கிராமப்புற வங்கி ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த காட்சி டெலிவிஷன் சானல்களில் நேற்று தொடர்ச்சியாக வெளியிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று, மத்திய சட்டத்துறை மந்திரி வீரப்ப மொய்லி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், "யாராக இருந்தாலும் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டு இருக்கக்கூடாது. அதிலும், மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு இப்படி நடந்து இருக்கக்கூடாது. இதுபற்றி எம்.பி.யிடம் விசாரணை நடத்துவேன்'' என்று தெரிவித்தார்.

சோனியா உத்தரவு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இந்த சம்பவம் குறித்து தனது அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார். நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும்படி, மத்திய மந்திரியும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான வீரப்ப மொய்லிக்கு அவர் உத்தரவிட்டு இருக்கிறார். காங்கிரஸ் கலாசாரத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இடம் இல்லை என்று கட்சி எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தும்படியும் அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஜெகன்நாத் எம்.பி., பாராளுமன்றத்தில் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய விவாதம் நடைபெற்றபோது காங்கிரஸ் கட்சிக்கு தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து ஜெகன்நாத் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

"நான் தலித் இனத்தை சேர்ந்தவன் என்பதால், எனக்கு சவால் விட்டு அவமானப்படுத்தும் விதத்தில் வங்கி மேலாளர் ரவீந்தர் ரெட்டி நடந்து கொண்டார். கடந்த 12 ஆண்டுகளாக எம்.பி.யாக இருக்கும் என்னிடம் இதுவரை யாரும் இதுபோல் நடந்து கொண்டது இல்லை. அப்படி இருக்கும்போது இந்த மேலாளர் எந்த அளவுக்கு ஆத்திரமூட்டும் விதத்தில் நடந்து கொண்டு இருப்பார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மது அருந்தி இருந்தார்

மேலும் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்தார். வாக்குவாதத்தின்போது, பொது மேலாளரை சந்திக்க வரும்படி அவருடைய தோளை எட்டிப்பிடிக்க முயன்றேன். அவர் சட்டென பின்னால் நகர்ந்ததால் எனது கை அவருடைய கன்னத்தின் மீது பட்டுவிட்டது, அவ்வளவுதான். அவரை அடிப்பதற்கு நான் முயற்சிக்கவில்லை''.

இவ்வாறு ஜெகன்நாத் எம்.பி. கூறினார்.

முதல்-மந்திரியுடன் சந்திப்பு

வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த விவகாரம் நாடு தழுவிய சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து ஜெகன்நாத் எம்.பி. ஆந்திர மாநில முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியை சந்தித்து பேசினார்.

பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், நடந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கப்போவதாகவும், இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்பப்போவதாகவும் தெரிவித்தார்.

 

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement