ரெயில்வே பட்ஜெட் நாளை தாக்கல் மக்கள் ஆதரவு பட்ஜெட்டாக இருக்கும் என மம்தா தகவல்
புதுடெல்லி, ஜுலை.2-
மத்திய ரெயில்வே பட்ஜெட்டை ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி பாராளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்கிறார். அது குறித்து கருத்து தெரிவித்த மம்தா, மக்கள் ஆதரவு பட்ஜெட்டாக இருக்கும் என்று தெரிவித்தார்.
கட்டண உயர்வு
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து, 3-ந் தேதி (நாளை) அன்று ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி, ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ரெயில்வே பட்ஜெட்டில் பெயரளவுக்கு சிறிதாக கட்டண உயர்வை அறிவிக்கிறார். எனினும், சாதாரண மக்களை பாதிக்கும் வகையில் அந்த உயர்வு இருக்காது.
அதே நேரத்தில், பயணிகளை மகிழ்விக்கும் புதிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார். ரேபரேலியில் ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைகிறது. உலக தரத்தில் நவீனமாகும் ரெயில் நிலையங்களின் பட்டியலில் மேற்கு வங்காளத்தில் உள்ள சீல்டா ரெயில் நிலையமும் இணைக்கப்படுகிறது. பெரும்பாலான திட்டங்கள், மேற்கு வங்காள மாநிலத்துக்கு செல்லும் என்று தெரிகிறது.
ஏழைகளுக்கான ரெயில்கள்
லாலு பிரசாத் அறிமுகப்படுத்திய `ஏழைகள் ரதம்' ரெயில்களை போல ஏராளமான ரெயில்கள் விடப்படும். ஆனால், `ஏழைகள் ரதம்' என்ற பெயர் நீக்கப்பட்டு, ஏ.சி. அல்லாத பெட்டிகளை கொண்டதாக அந்த ரெயில்கள் இருக்கும். அவற்றில் பெரும்பாலானவை கிழக்கு ரெயில்வேயில் ஓடும் விதமாக அறிமுகமாகின்றன.
சாதாரண ரெயில்களை விட, இந்த ரெயில்களில் 25 சதவீத அளவுக்கு கட்டணம் குறைவாக இருக்கும். புதிய ரெயில்வே மேம்பாலங்கள், சுரங்க பாதைகள் போன்ற அறிவிப்புகள் வெளியாகின்றன. இது தவிர வழக்கமான புதிய ரெயில்கள் மற்றும் புதிய பாதைகள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகும்.
ரூ.20-க்கு மீன் சாப்பாடு
ரெயில்வே பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதன்படி, அனைத்து முக்கிய ரெயில் நிலையங்களின் பாதுகாப்பும் ஒருங்கிணைக்கப்படுகிறது. ரெயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். இரண்டாம் வகுப்பு பெட்டிகளின் பக்கவாட்டில் மூன்றாவதாக இணைக்கப்பட்ட படுக்கைகளை அகற்றும் உத்தரவும் வெளியாகிறது.
ரூ.20-க்கு மீன் குழம்புடன் சாப்பாடு, வெஜ் பிரியாணி மற்றும் ரூ.10-க்கு பூரி-சப்ஜி போன்ற ஜனதா சாப்பாடு போன்ற பயணிகளை குளிர்விக்கும் அறிவிப்புகளையும், பலமணி நேரம் தாமதமாக ரெயில் வந்தால் பயணிகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தையும் மம்தா அறிவிக்கிறார். சாப்பாடு வசதி உள்ள ரெயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.
ரூ.20-க்கு சீசன் டிக்கெட்
தொழிலாளிகள், சிறு வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு மாதந்தோறும் ரூ.20-க்கு சீசன் டிக்கெட் வழங்கும் திட்டமும் அறிமுகமாகிறது. ரெயில்களை சரியான நேரத்தில் இயக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
நாடு முழுவதும் 139 பயணிகள் தகவல் சேவை மையம் அமைக்கப்படும். ரெயில் நிலையங்களில் கூடுதல் போர்ட்டர்களை நியமிக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது. ரெயில்கள் வருவதை செயற்கை கோள் மூலமாக கண்காணித்து, பயணிகளுக்கு சரியான தகவலை அளிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
மம்தா தகவல்
ரெயில்வே பட்ஜெட் குறித்து பல்வேறு தகவல்களும் வெளியான நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக மம்தா பானர்ஜி நேற்று வந்தார். அப்போது அவரிடம் ரெயில்வே பட்ஜெட் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மம்தா, "இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள். அனைத்தையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். இந்த முறை தான் பட்ஜெட்டை தயாரிக்க 15 நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்டேன். ரெயில்வே துறையின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரெயில்வே பட்ஜெட், மக்கள் ஆதரவு பட்ஜெட்டாக இருக்கும் என்பதை மட்டு என்னால் உறுதியாக கூற முடியும்'' என்று தெரிவித்தார்.



del.icio.us
Digg