பாராளுமன்ற பட்ஜெட் கூட்டம் இன்று தொடங்குகிறது லிபரான் கமிஷன் அறிக்கையால் அமளி ஏற்படும் சூழ்நிலை
புதுடெல்லி, ஜுலை.2-
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதற்கிடையே, பாபர் மசூதி இடிப்பு குறித்த லிபரான் கமிஷன் அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எனவே, லிபரான் கமிஷன் அறிக்கையால் பாராளுமன்றத்தில் பலத்த அமளி ஏற்படும்.
பட்ஜெட் கூட்டத்தொடர்
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு மீண்டும் பதவியேற்ற பிறகு, முதலாவது பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 7-ந் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
அதைத் தொடர்ந்து நாளை (3-ந் தேதி) ரெயில்வே பட்ஜெட்டை ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி தாக்கல் செய்வார். 6-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று மத்திய பொது பட்ஜெட்டை நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். பாராளுமன்ற தேர்தலுக்கு முன், மூன்று மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஜனாதிபதி ஆட்சி நடைபெறும் ஜார்கண்ட் மாநிலத்துக்கான பட்ஜெட்டும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
அனைத்துக்கட்சி கூட்டம்
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை அமளியின்றி சுமுகமாக நடத்துவதற்காக அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை சபாநாயகர் மீராகுமார் கூட்டினார். நேற்று நடந்த அந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங், எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, மம்தா பானர்ஜி உட்பட அனைத்து கட்சிகளின் பாராளுமன்ற தலைவர்களும் பங்கேற்றனர்.
ஆனால், பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்த லிபரான் கமிஷன் அறிக்கை நேற்று முன்தினம் பிரதமரிடம் வழங்கப்பட்டது. அதில் உள்ள விவரங்கள் வெளியிடப்படவில்லை.
எனினும், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மீது குற்றஞ்சாட்டி இருப்பதாக தெரிகிறது. எனவே, `17 ஆண்டுகளுக்கு பிறகு அறிக்கையை சமர்ப்பிப்பதன் மூலமாக காங்கிரஸ் கட்சி தனது சதி திட்டத்தை தொடங்கி விட்டது' என பா.ஜனதா புகார் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை
இந்த சூழ்நிலையில், நேற்று நடந்த அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்திலும், `லிபரான் கமிஷன் அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்தது. ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், `லிபரான் கமிஷன் அறிக்கையுடன், அது தொடர்பாக மத்திய அரசு மேற்கொள்ள உள்ள நடவடிக்கை அறிக்கையையும் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.
அனைத்துக்கட்சி கூட்டத்திலேயே லிபரான் கமிஷன் அறிக்கை தொடர்பான பிரச்சினை எழுப்பப்பட்டு இருப்பதால் பாராளுமன்றத்திலும் அது எதிரொலிக்கும். எனவே, லிபரான் கமிஷன் பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நழுவல்
இதற்கிடையே கூட்டம் முடிந்ததும் பிரதமரிடம் லிபரான் கமிஷன் அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வது குறித்து கேட்கப்பட்டது. ஆனால், அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்டார்.
அவர் கூறும்போது, "பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாகவும், அமைதியாகவும் நடத்த அனைத்து கட்சி தலைவர்களும் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன். மத்திய அரசு சார்பாக அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கோரிக்கை விடுக்கிறேன். பாராளுமன்றம் என்பது அனைத்து பிரச்சினைகளையும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் அமைப்பு ஆகும். எனவே, பாராளுமன்ற நடவடிக்கைகளை சீராக நடைபெற வேண்டும்'' என்றார்.
சபாநாயகர் தகவல்
லிபரான் கமிஷன் அறிக்கையை தாக்கல் செய்வது குறித்து சபாநாயகர் மீரா குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மீராகுமார், "லிபரான் கமிஷன் மீதான நடவடிக்கை அறிக்கையை மத்திய அரசு தயாரிக்க வேண்டும். அதற்கு சிறிது காலம் பிடிக்கும். அதற்கு பிறகு தான், அந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும். அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தலைவர்களுமே பாராளுமன்றம் சுமுகமாக நடைபெற ஒத்துழைப்பதாக உறுதி அளித்துள்ளனர். பெண்கள் மசோதாவை பொறுத்தவரை அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும்'' என்றார்.
பெண்கள் மசோதா
லிபரான் கமிஷன் அறிக்கை தவிர, மேற்கு வங்காள மாநிலத்தில் லால்கார், ராம்கார் உள்ளிட்ட பகுதிகளை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் கைப்பற்றியது குறித்த பிரச்சினையும் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும். அந்த மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியை குறி வைத்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அமளியில் ஈடுபடும்.
மேலும் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது நடைபெறும் இனவெறி தாக்குதல்கள், விலைவாசி உயர்வு, மின் வெட்டு, குடிநீர், உணவு தானிய தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளையும் எதிர்க்கட்சிகள் எழுப்புவார்கள். பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மீது பாராளுமன்ற நிலைக்குழு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. எனவே, இந்த கூட்டத்தொடரில் பெண்கள் மசோதா நிறைவேற வாய்ப்பில்லை.



del.icio.us
Digg