தேசிய அடையாள அட்டை திட்ட செலவு ரூ.1.5 லட்சம் கோடி? கம்ப்யூட்டர் மயமாக்கும் பணி விரைவில் ஆரம்பம்
புதுடில்லி : எல்லா குடிமகன்களுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த, ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று இப்போதைக்கு மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை, எல்லா மக்களுக்கு தர வேண்டும்; அப்போது தான், பல விஷயங்களில் பயன்படும் என்று பல ஆண்டாக மத்திய அரசு முயன்று வருகிறது.
ஆனால், அதற்கான செலவு அதிகமாக இருக்கும் என்பதுடன், பணிகளும் மிகவும் சிக்கலான ஒன்று என்பதால், இதுவரை பெரிய அளவில் அதற்கு முயற்சிக்கவே இல்லை. அடையாள அட்டையாக பெரும்பாலும் ரேஷன் கார்டு தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதிலும் குளறுபடி உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டதால், உறுதியான அடையாள அட்டையாக ஏற்க முடியவில்லை. வருமான வரி அறிக்கை சமர்ப்பிக்கவும், வரவு செலவுகளைக் கண்காணிக்கவும், "பான்' கார்டை வருமான வரித்துறை அளித்தது. அதிலும் தவறு நேர்வதால், அதை முழுமையான அடையாள அட்டையாகக் கருத இடமில்லை.
இந்நிலையில், 2003ல் தான் முதன் முதலில் பல்நோக்கு அடையாள அட்டை வழங்குவது பற்றி பிள்ளையார் சுழி போடப்பட்டது. அப்போது, 12 மாநிலங்களில் மட்டும் மாதிரி திட்டம் அமல்படுத்தப்பட்டது. அங்குள்ள 31 லட்சம் மக்களுக்கு அடையாள அட்டை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டப்பணிகள் ஆரம்பித்து, 2007ல் தான் முதல் தேசிய கார்டு வழங்கப்பட்டது. இதில் மந்தம் இருப்பதை அறிந்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடப் பட்டது. அதற்கு பதில் அளித்த கோர்ட், "எல்லா குடிமகன்களுக்கும் சட்டப்பூர்வ தேசிய கார்டு வழங்குவது முக்கியம். அதில், அரசு முழு அளவில் முயற்சி எடுத்து அமல்படுத்த வேண்டும்' என்று உத்தரவிட்டது. இந்நிலையில், புதிய அரசு இப்போது தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்துக்கு மீண்டும் புத்துயிர் அளித்துள்ளது. தேசிய அடையாள அட்டை வழங்கும் வகையில், உயர் கமிட்டியை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த கமிட்டிக்கு தலைவராக இன்போசிஸ் சாப்ட்வேர் நிறுவன துணைத் தலைவர் நந்தன் நீல்கனி பொறுப்பேற்க உள்ளார்.
தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி சாதாரணமானது அல்ல; முதலில், நாடு தழுவிய அளவில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்களின் பெயர், முகவரி பதிவுகளை கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும். அந்த பணியை, உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய பதிவாளர் அலுவலகம் மேற்கொள்ளும். தேசிய மக்கள் தொகை பதிவேடு என்று ஒவ்வொரு 10 ஆண்டும் இந்த அலுவலகம் தயாரிக்கும். இதற்காக நாடு தழுவிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப் படும். இந்த பணியை செய்யும் இந்த அலுவலகம், தேசிய அடையாள அட்டைக்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பற்றிய கணக்கெடுப்பை நடத்த வேண்டும். போட்டோ ஒட்டிய இந்த அடையாள அட்டையை எதற்கும் பெயர், முகவரி ஆதாரமாக பயன்படுத்தலாம்.
புதிய அடையாள அட்டையில், சம்பந்தப்பட்டவர் தொடர்பாக 16 விதமான விவரக் குறிப்புகள் இருக்கும். போலீஸ் உட்பட பல்வேறு அரசு துறைகளுக்கும், பொதுமக்கள் தொடர்பான விவரங்கள் அறிய இந்த அட்டை பயன்படும். இந்த அடையாள அட்டை தயாரிக்கும் திட்டத்துக்கு பல கட்டங்களில், பல்வேறு துறைகள் வழியாக பணிகள் நடக்க வேண்டியிருப்பதால், மொத்தம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. கிராமங்களில் பலருக்கு ரேஷன் கார்டும் இல்லை; ரேஷன் சப்ளையும் இல்லை. அதுபோல, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை தரப்படுவதிலும் குளறுபடி நடக்கிறது. இது போன்ற குழப்பங்களுக்கு, தேசிய அடையாள அட்டை முற்றுப் புள்ளி வைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.



del.icio.us
Digg