மீள்குடியேறிய பின்னரும் முல்லைத்தீவில் இராணுவப் பிரசன்னமிருக்கும்

Font size: Decrease font Enlarge font

 வன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்ட பின்னரும், அந்தப் பகுதிகளில் இராணுவத்தினர் தொடர்ந்தும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருப்பார்கள் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் இந்த வருடக் கடைசிக்குள் மீள்குடியேற்றப்படுவார்களென்பதுடன், இந்த மீள்குடியேற்றத்தின் பின்னரும் குறிப்பிட்டதொரு காலம்வரை பொதுமக்களுடன் இராணுவத்தினர் தங்கியிருப்பார்களென இலங்கை அரசாங்கம் தெரிவிப்பதாகவும் பி.பி.சி செய்திச்சேவைக்கு உதய நாணயகார குறிப்பிட்டார்.

தற்போது கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் இரண்டு இராணுவத் தலைமையகங்கள் அமைக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருக்கும் இராணுவப் பேச்சாளர், இந்த இராணுவத் தலைமையகங்களின் கீழ் முகாம்கள் அமைக்கப்படுமெனவும் கூறினார்.

மற்றுமொரு தீவிரவாத எழுச்சியை ஒடுக்குவதற்கும், அபிவிருத்தித் திட்டங்களில் உதவியளிப்பதற்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை 50வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்;கை அரசாங்கம் எண்ணியிருப்பதாகவும் உதய நாணயகார குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற அனைத்து செயற்பாடுகளிலும் இராணுவத்தினரின் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது கவலையளிக்கும் விடயமெனக் குறிப்பிட்டிருக்கும் மனோ கணேசன், இதனால் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசியல் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படமாட்டாதெனவும் கூறினார்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement