சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் மூட்டு சவ்வு இழந்த சிறுவனுக்கு தாயின் சவ்வு பொருத்தி அபூர்வ சிகிச்சை
சென்னை,நவ.1-
கால் மூட்டு சவ்வு இழந்து தவித்த சிறுவனுக்கு அவனுடைய தாயின் தொடை சவ்வை பொருத்திய அபூர்வம் சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது.
சிறுவனுக்கு சவ்வு மாற்று சிகிச்சை
திருவள்ளூர் ஈக்காடு பகுதியை சேர்ந்தவர் சாந்தி ( வயது 43). இவருடைய மகன் சிவா ( 14) 9-வது வகுப்பு படித்துவருகிறான். அவன் சைக்கிளில் சென்றபோது கீழே விழுந்தான். அதில் அவனுடைய இடது காலில் உள்ள மூட்டு சவ்வுகிழிந்தது. இதனால் அவன் நடக்க முடியாமல் சிரமப்பட்டான். 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு மூட்டு சவ்வு கிழிந்தால் அவர்களின் தொடையில் உள்ள சவ்வை எடுத்து பொருத்தலாம். ஆனால் சிறுவர்களுக்கு தொடை சவ்வு மிகவும் மென்மையாக இருக்கும். அதனால் அதை பொருத்தமுடியாது.
இதனால் பெரியவர்களின் தொடை சவ்வை எடுத்து சிறுவனுக்கு பொருத்தி சாதனை படைத்துள்ளார், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஜார்ஜ் லியோனார்டு பொன்ராஜ்.
சவ்வு இழந்த சிறுவன் சிவாவுக்கு கீகோல் சர்ஜரி மூலம் சிவாவின் தாய் சாந்தியின் தொடை சவ்வை எடுத்து சிவாவுக்கு மூட்டில் பொருத்தி உள்ளார். இந்த அறுவை சிகிச்சை குறித்து டாக்டர் பொன்ராஜ் கூறியதாவது:-
விளையாட்டு வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவு அரசு ஆஸ்பத்திரிகளில் சென்னை ராயப்பேட்டைஆஸ்பத்திரியில் மட்டும்தான் உள்ளது. இந்த பிரிவில் பணிபுரியும் நான் இந்த சிகிச்சை முறை பற்றி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் உள்ள டாக்டர் லியோ பின்செஸ்கியிடம் பயிற்சி பெற்றேன்.
எலும்பு முறிவு அறுவை சிகிச்சை துறை தலைவர்கள் டாக்டர்கள் சிவகுமார், நாகப்பன் ஆகியோர் முன்னிலையில் சிறுவன் சிவாவுக்கு இந்த அறுவை சிகிச்சையை செய்தேன். இப்போது சிவா நன்றாக நடக்கிறான். தாய் நன்றாக இருக்கிறார். அவருக்கு இன்னும் 6 மாதத்திற்குள் இந்த சவ்வு வளர்ந்துவிடும். ஆனால் அவருக்கு இந்த சவ்வை எடுத்ததால் எந்த பாதிப்பும் இல்லை. அவர் வழக்கம்போல செயல்படலாம்.
இவ்வாறு டாக்டர் பொன்ராஜ் தெரிவித்தார்.



del.icio.us
Digg
