சாமியார் வீடியோ காட்சி: லெனின் பின்னணியில் சதிக் கும்பல்; போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வருமா?
திருவண்ணாமலை சாமியார் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் ஒன்றாக இருப்பது போன்ற படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நித்யானந்தாவின் நம்பிக் கைக்குரிய சீடராக இருந்த லெனின் என்ற தர்மானந்தா இந்த வீடியோ காட்சிகளை நான்தான் எடுத்தேன் என பகிரங்கமாக அறிவித்தார்.
இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் லெனின் கொடுத்த புகாரின் பேரில் நித்யானந்தா மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் கர்நாடகாவுக்கு மாற்றப்படும் என்று கூறிய கமிஷனர் ராஜேந்திரன், தமிழக போலீசாரும், மிரட்டல், மோசடி வழக்கை விசாரிப்பார்கள் என்று கூறினார். சாமியார் மீது புகார் கொடுத்த சீடர் லெனின் மோசடி பேர்வழியாக வலம் வந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
காந்தப்படுக்கை மோசடியில் சிக்கிய லெனின் தனது பெயரை தர்மானந்தா என மாற்றிக்கொண்டு நித்யானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்தில் அடைக்கலம் புகுந்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
நித்யானந்தாவின் சீடரான பின்னர், லெனின், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமானவராக திகழ்ந்தார். இதனால் பெங்களூர் ஆசிரமத்தில் லெனினின் கை ஓங்கியிருந்தது. நித்யானந்தா எங்கு சென்றாலும், லெனினையும் தன்னுடன் அழைத்துச் செல்ல தொடங்கினார். இதனால் நித்யானந்தாவின் அத்தனை நடவடிக்கைகளும் லெனினுக்கு அத்துபடியானது.
இந்நிலையில்தான் பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்தை அடைவதற்கு ஒரு கும்பல் திட்டம் தீட்டியது. இதற்காக நித்யானந்தாவை சந்தித்து, இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் பல கட்டங்களாக பேரம் பேசி உள்ளனர்.
ஆனால் நித்யானந்தா எதற்கும் ஒத்துவரவில்லை. ஆசிரமத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளில் அவர் கவனம் செலுத்த தொடங்கினார். கட்டிட வேலைகளும் வேகமாக நடைபெற தொடங்கின.
இதன் பிறகுதான் நித்யானந்தாவுக்கு எதிராக சதி திட்டம் அரங்கேறியுள்ளது. யாரை வைத்து சாமியாரை சிக்க வைக்கலாம் என சதிக்கும்பல் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், இவர்களின் வலையில் ஆசிரம நிர்வாகி ஒருவர் முதலில் சிக்கினார். இவரை வைத்துதான் லெனினை பிடித்துள்ளனர்.
இதற்காக லெனினுக்கும், ஆசிரம நிவாகிக்கும் கோடிக்கணக்கில் பணம் பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் பிறகுதான் சாமியாரின் படுக்கை அறை காட்சிகள் ரகசியமாக படம் எடுக்கப்பட்டு வெளி உலகுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த பெங்களூர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை நேற்று அனுப்பி வைத்துள்ளனர். இது கையில் கிடைத்ததும் பெங்களூர் போலீசார் விசாரணையை தொடங்குவார்கள். நித்யானந்தாவை படம் எடுத்ததாக லெனின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதால் அவரிடம் முதலில் விசாரணை நடத்தப்படும்.
அப்போது லெனினிடம், எதற்காக நித்யானந்தாவை படம் எடுத்தீர்கள். இதற்கு மூல காரணம் என்ன? நீங்கள் எடுத்த வீடியோ, காட்சிகளை முதலில் போலீசுக்கு கொடுக்காமல் டி.வி. மற்றும் பத்திரிகைகளுக்கு கொடுத்தது ஏன் என்பது போன்ற கேள்விகளை கேட்க உள்ளனர். அப்போது லெனினின் பின்னணியில் செயல்படும் சதிக்கும்பல் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் கொடுத்த லெனின் எங்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது. முக்கிய பிரமுகர் ஒருவர் வீட்டில் அவர் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த முக்கிய பிரமுகரின் பின்னணி குறித்து பெங்களூர் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
